கோவை : ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் ஜனாதிபதி விருது உள்ளிட்டவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தனிச் சிறப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிவிக்கப்படும் விருதுகளை சென்னையில் பிரத்யேக நிகழ்ச்சி நடத்தப்பட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு முதல்வர் கையால் வழங்கப்படுகிறது.
காவல், லஞ்சம், தீயணைப்பு, சிறை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் விருதுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கழித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் தான் விருது பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக தனியாக பிரத்யேக நிகழ்ச்சி நடத்தி வேறு ஒரு நாள் விருதுகள் வழங்கப்படுகின்றன.பொதுவாக பணி காலம் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ள போலீசாரின் பெயர்கள் தான் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டாலும், சில நேரங்களில் பணி ஓய்வு பெற்ற பின் தான் விருதுகளை கையில் ஏந்த வேண்டியுள்ளது. பணி ஓய்வுக்கு பின் சீருடையில் சென்று தங்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை பெற முடியாது. இதை கருத்தில் கொண்டு விருது அறிவிக்கப்பட்டதும் மாத, ஆண்டு கணக்கில் தாமதம் செய்யாமல் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE