சென்னை: தமிழகத்தில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற அலங்கார ஊர்தியில், விடுதலையை துக்க தினமாக அறிவித்த ஈ.வெ.ரா.,வுக்கு முகப்பில் சிலையா என எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பலரும் தங்களது விமர்சனத்தை, கோபத்தை, கிண்டலை சமூக வலைதளங்களில் காட்டியதால் இவ்விஷயம் தேசிய அளவில் டிரெண்டானது.

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை தமிழகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மீது கவனம் குவிந்தது.
டில்லியில் உள்ள அலங்கார ஊர்திகள் தேர்வு குழு, தமிழக அரசின் அலங்கார ஊர்தியை தேர்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் அலங்கார ஊர்திகள் பேசுபொருளானது. அதன்படி நேற்றைய(ஜன.,26) குடியரசு தின விழாவில், டில்லி நிகழ்ச்சியில் தேர்வாகாத வ.உ.சி., பாராதியார், வேலுநாச்சியார் மற்றும் கோயில் கோபுரம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுத்தது.

அதனைத் தொடர்ந்து 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பிலான அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில் இந்திய விடுதலைக்காக தமிழகத்திலிருந்து பங்கெடுத்த தலைவர்களான காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், ராஜாஜி ஆகியோர் சிலைகள் இருந்தது.
மேலும் அந்த ஊர்தியின் முகப்பில் ஈ.வெ.ரா., கைத்தடியுடன் நடைபோடுவது போன்ற சிலையும் இடம்பிடித்தது. அப்புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானது. மேலும் குடியரசு தின ஊர்தியில் சுதந்திர தின ஆண்டான 75ஆம் ஆண்டை குறிப்பிட்டிருந்தது எதிர்க்கட்சிகளால் கிண்டல் செய்யப்பட்டது.
நாடு விடுதலையடைந்த சமயத்தில் அதனை துக்க தினமாக தனது தொண்டர்களுக்கு அறிவித்தவரை குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்கலாமா என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.
'நாட்டின் பிற மாகாணங்களுக்கு விடுதலை அளியுங்கள், ஆனால் சென்னை மாகாணத்தை நீங்களே ஆளுங்கள்' என லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதிய ஈ.வெ.ரா.,வை, ஏதோ சுதந்திர போராட்டத்தையே தலைமை ஏற்று நடத்தியவர் போல அதிக முக்கியத்துவம் தந்து அலங்கார ஊர்தி முகப்பில் வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கின்றனர். சுதந்திர தின விஷயத்தில் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் நிலைப்பாட்டை அவருடன் பயணித்த அண்ணாதுரையே எதிர்த்து இன்பநாள் என அறிக்கை வெளியிட்டார். அதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார் என்பது வரலாறு என சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அரசின் இச்செயலை கடுமையாக கிண்டலடித்து ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.அதில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவுகள் இடம்பெற்று தேசிய அளவிலும் டிரெண்டானது. 'ஊசி கூட தயாரிக்க முடியாது இந்தியாவால்' என கூறியவருக்கு ஊர்தி எதற்கு என ஒருவர் கேட்டுள்ளார். மேலும் ஈ.வெ.ரா.பின்புறம் கருப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டிருப்பதையும் கண்டித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE