சமுதாய வளர்ச்சிக்காக, புதிய சாலை அமைப்பது, பழைய சாலைகளை விரிவுபடுத்துவது, 'சிப்காட்' எனப்படும் பொருளாதார சிறப்பு மண்டலங்களை உருவாக்குவது போன்ற பணிகள் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற அதிக பணிகள் நடைபெறும் மாவட்டங்களில், காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அவ்வாறு நடைபெறும் இதுபோன்ற பணிகளில், முதற்கட்டமாக தனியாரிடம் இருந்து நிலங்களை பெற்று, அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கி அந்த நிலங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு எடுக்கப்படும் நிலங்களில், வருவாய் துறையினர் நடத்திய முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங்கள் முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றனர்.இந்த விவகாரம் கடந்தாண்டு ஜூன் மாதம் பூதாகரமாக வெடித்தது. இதில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த டி.ஆர்.ஓ., நர்மதா, ஆசிஸ்மேத்தா, செல்வம் என, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டது; தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், சென்னை - பெங்களூரு இடையே புதிதாக எஸ்க்பிரஸ் சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நில எடுப்பு செய்தபோது, 2018ல், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டு, அந்த நிலங்களுக்கும் பல மடங்கு இழப்பீடு பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், 300 கோடி ரூபாய் புழங்கியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
போலி பத்திரம்
இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள வல்லம் - வடகால் ஆகிய கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்து, சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெற்றுள்ளனர்.இந்த விவகாரம், காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியவந்தது. தொடர்ந்து, தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் தெரியப்படுத்திய பின், சிப்காட் தாசில்தார் நாராயணன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில், சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் இரண்டு தாசில்தார் உட்பட, 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலரான ராஜேந்திரன், தற்போது திருப்பூர் மாவட்ட ரெகுலர் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்த விபரம்: ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள வல்லம், வடகால் ஆகிய கிராமங்களில், தொழில் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட சிப்காட் நிலங்கள், அரசுக்கு சொந்தமானவை. இந்த இடங்களில், விற்பனை அல்லது பரிவர்த்தனை போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது. சிப்காட் நிலங்கள், 2011, 2012ம் ஆண்டுகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2013ல் சிப்காட் துறையினருக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த இடங்கள் அனைத்தும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், வல்லம்- கிராமத்தில், நில எடுப்பு செய்யப்பட்ட சர்வே எண்களில், 2020ல் மினிஷ்குமார் என்பவருக்கு சிறப்பு பொது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, செல்லத்தக்கது அல்ல என்பது தெளிவாகிறது.
நிதி இழப்பு
மேலும், 2020, ஆகஸ்ட் மாதம் வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலை, பூங்கா பரப்பான 7.25 லட்சம் சதுரஅடி இடத்தை, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு, 1991ல் தானமாக அளித்தது. இந்த தான நிலத்தை, இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்தோஷம் என்பவரின் மகன் அமலாதாஸ் ராஜேஷ் என்பவர், பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், தான நிலம் என்பதை ரத்து செய்தார்.இதையடுத்து ஜெயசந்திரன், தமிழ்செல்வன், கார்த்திக் ஆகியோருக்கு, கிரையம் அளித்து, அதன் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
வல்லம் - வடகால் கிராமங்களில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில், பொது நோக்கத்திற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள், பூங்கா நிலங்களுக்கு, நில இழப்பீடு தொகையாக, 21.08 கோடி ரூபாய் அரசு விதிகளுக்கு மாறாக, நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில், வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, வழக்கு விபரத்தில் கூறப்பட்டுள்ளது.


சிப்காட் நிலங்களில் பல்வேறு மோசடி !
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில எடுப்பு விவரகாரத்தில், ஏற்கனவே பீமந்தாங்கல், நெமிலி ஆகிய இடங்களிலும், தற்போது வல்லம்- - வடகால் சிப்காட் நிலங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மோசடி செய்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை மூன்று வகையான மோசடிகள் வெளிவந்த நிலையில், மற்ற சிப்காட் நிலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் பல நடைபெற்றிருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றன். மண்ணுார் - வளர்புரம் உள்ளிட்ட பிற சிப்காட் நில எடுப்பு கோப்புகளில் இதுபோன்ற மோசடிகளை விசாரிக்க, தனி குழுவை அரசு நியமிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிப்காட் மேலிடம் தொடர்பு
வல்லம்- - வடகால் சிப்காட் நில எடுப்புக்கு, 2011, 2012ம் ஆண்டுகளில் அறிவிப்பு வெளியாகி, 2013ம் ஆண்டே நிலங்கள் எடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், ஏழு ஆண்டுகள் கழித்து, மீண்டும் அந்த நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும்போது, அவற்றை அரசிடம் இருந்து எவ்வாறு கேட்டு பெற முடியும் என, கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், சிப்காட் துறையில் மேலிடம் வரை தொடர்பு இருக்கும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.
யாரும் கைது செய்யப்படவில்லை
பீமந்தாங்கல், நெமிலி உள்ளிட்ட நில எடுப்பு விவகாரங்களில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு அதிகாரிகள் யாரையும் கைது செய்ததாக தெரியவில்லை. தற்போதும், வல்லம்- - வடகால் விவகாரத்தில், 21 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் என பல்வேறு முக்கிய அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது வரை யாரையும் கைது செய்ததாக தெரியவில்லை. இதுபோன்ற நுாதன மோசடி வழக்குகளில் பெரிதாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE