வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதால், திருப்பூர் மாநகராட்சி தேர்தலுக்கு, அரசியல் கட்சியினர் தயாராகியுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நாளை முதல் மனுக்கள் பெறப்படுகின்றன. பிப்., 4 வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை - பிப்., 5, மனு திரும்ப பெற கடைசிநாள் பிப்., 7 என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக ஆவலுடன் காத்திருந்த அரசியல் கட்சியினர் பரபரப்பாகியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியை கைப்பற்ற தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தீவிரம் காட்டுகின்றன. கடந்த, 2011ம் ஆண்டுக்கு பிறகு, மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருப்பதால், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.,வும், முழு வீச்சில் இறங்கியுள்ளன.
தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., - காங்கிரஸ் - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., - முஸ்லிம் லீக் என, பல்வேறு கட்சிகள், கோரிக்கை பட்டியலுடன் காத்திருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்தால் மட்டுமே, மாநகராட்சியை கைப்பற்ற முடியுமென, கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - த.மா.கா., உள்ளன. த.மா.கா.,வுக்கு, இரண்டு வார்டுகளும்; பா.ஜ.,வுக்கு, ஐந்து வார்டுகளும் ஒதுக்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் ஆதரவை பெறும் வகையில், பா.ஜ., மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு, வார்டின் மத்தியில் உள்ள, செல்வாக்குள்ள வார்டை கொடுக்க வேண்டுமென, ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
தி.மு.க.,வில், மாநகர பொறுப்பாளராக இருப்பவர், அந்த வார்டில் களமிறங்குவதால், பா.ஜ.,வில் பலமான நபரை களமிறக்கி, போட்டியை கடுமையாக்க வேண்டுமென, அவர்கள் தரப்பு விரும்புகிறது.

மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில், 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்; இடஒதுக்கீடு விவரம் வெளியானதும், 'சீட்' கேட்டு காத்திருந்தவர்கள், தங்கள் மனைவியை வேட்பாளராக்க, சட்டரீதியான முன்மொழிவுகள் தயாரிக்க துவங்கி விட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'மாநகராட்சியில் முக்கிய பதவியில் இருந்த, 'மாஜி' பிரமுகரை மேயர் வேட்பாளர் என அறிவித்து, தேர்தல் பணியை துவக்க, அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. 60 வார்டுகளிலும் வேட்பாளர் தயாராகிவிட்டனர். தி.மு.க., கூட்டணியில், தேர்தலுக்கு முன்பாகவே, மேயர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா என்று தெரியவில்லை. வார்டு வாரியாக, 10 ஆண்டுகளில் செய்துள்ள பணிகளை சுட்டிக்காட்டி, ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.
பலம் யாருக்கு?
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தாங்களே பலமாக உள்ளதாக மார்தட்டி வருகின்றன.ஆளும் கட்சியான தி.மு.க., மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது கவுரவப் பிரச்னையாக முன்னெடுத்து தேர்தல் பணியில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த மாநகராட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற வேகத்துடன் களம் காண்கிறது. ஆளும் கட்சியான தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மெகா வெற்றியைப் பெற்ற நிலையில் அதே கூட்டணி தொடரும் நிலை உள்ளது.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் மூன்று சட்டசபை தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இதில் வடக்கு மற்றும் பல்லடம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதும், மீதமுள்ள தெற்கு தொகுதியில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததும் அ.தி.மு.க.,வுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE