ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத, 103 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், குடியரசு தினமான நேற்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்றுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள, 144 கடைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 103 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து 103 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இத்தகவலை ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE