ஈரோடு: 'முதல்வரின் முகவரி' மூலம் பெறப்பட்ட மனுக்களில், 35 ஆயிரம் மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களில் பெறப்படும் மனுக்கள், கடந்த நான்கு மாதங்களாக, 'முதல்வரின் முகவரி' என்ற திட்டத்துறையின் கீழ் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களும், இத்திட்டத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டு, முதல்வரின் தனிப்பிரிவால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுபற்றி, ஈரோடு தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன் கூறியதாவது: முதல்வரின் தனிப்பிரிவு, ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம், அமைச்சர்கள் பெரும் மனுக்கள் போன்றவை ஸ்கேன் செய்யப்பட்டு, முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. ஒரே மனு பல முறை வழங்கியது, தகுதி அற்றவை, தகுதி இன்மையால் சில மனுக்கள் நிராகரிக்கப்படும். மற்ற மனுக்களில் உடனடி தீர்வு காணப்படும் மனு தவிர, வளர்ச்சி திட்டப்பணிகள், சாலை அமைத்தல், உதவித்தொகை பெறுதல், போலீஸ் நடவடிக்கை போன்றவை ஏற்கப்பட்டு, அந்தந்த துறை மூலம் நடவடிக்கைக்கு அனுப்பப்படும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 78 ஆயிரத்து, 308 மனுக்களில், 28 ஆயிரத்து, 591 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 13 ஆயிரத்து, 98 மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கால அவகாசம், நிதி, திட்ட அனுமதி போன்றவை தேவைப்படுவதால், அவை நிலுவையல் வைக்கப்பட்டுள்ளன. உரிய தகுதியுடன் ஏற்கப்பட்ட, 35 ஆயிரத்து, 314 மனுக்கள் அந்தந்த துறை மூலம் தீர்வு காணும் நடவடிக்கையில் உள்ளன. இதில் குறிப்பிட்ட மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும். ஒவ்வொரு திங்கள் கிழமையும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 250 மனுக்கள் வரை பெறப்படும். கடந்த வாரம், 127 மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனையில் உள்ளன. 'முதல்வரின் முகவரி' திட்டம் மூலம், அனைத்து மனுக்களும் ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படுவதால், மனு இல்லை, தவறிவிட்டது என்ற காரணங்கள் கூறாமல், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE