வேலுார்: வேலுாரில், வாய்த்தகராறில் நடந்த கொலையில் பிணத்துடன் சாலை மறியல் செய்தனர்.
வேலுார் கொசப்பேட்டை எஸ்.எஸ்., மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன், 42. இவர் அங்குள்ள டீ கடையில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் மகன் சீனிவாசன், 42. நேற்று இரவு 7:30 மணிக்கு டீ கடை சீனிவாசன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூலித் தொழிலாளி சீனிவாசன் குடித்து விட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் டீ கடை சீனிவாசனை, 42, கூலித் தொழிலாளி சீனிவாசன், 40, கத்தியால் குத்தினார். இதில் டீ கடை சீனிவாசன், 42, சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். வேலுார் தெற்கு போலீசார் கூலித்தொழிலாளி சீனிவாசனை கைது செய்தனர். இரண்டு சீனிவாசன்களும் வேறு, வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டீ கடை சீனிவாசன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் ஆம்புலன்சில் இன்று பிற்பகல் 12:00 மணிக்கு எடுத்து வந்தனர். வேலுார் அண்ணா சாலையில், டீ கடை சீனிவாசன் உறவினர்கள் ஆம்புலன்சை மடக்கி பிணத்தை இறக்கி சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வேலுார் தெற்கு போலீசார் மீது டீக்கடை சீனிவாசன் உறவினர்கள் கற்கள் வீசி தாக்கினர்.
தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கொலை நடந்த ஆர்.என்.மானியம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவு நடக்கிறது. போலீசார் இதை தடுக்காமல் கஞ்சா வியாபாரிகளுக்கு துணை போகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி கொலைகள் நடக்கிறது.
கஞ்சா வியாபாரிகளுக்கு துணை போகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். டீ கடை சீனிவாசன் பிணத்தை மறுபடியும் ஆம்புலன்சில் ஏற்றி அவரது வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE