வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கோவிட் தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் விற்பனை செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி உள்ளது. அதேநேரத்தில் மருந்து கடைகளில் கிடைக்காது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்ட அறிக்கையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் என்ற நிலையில் இருந்து வயது வந்தோருக்கான சாதாரண புதிய மருந்து என்ற அனுமதியை சில நிபந்தனைகளுடன் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்த இரண்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தன. மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த வல்லுநர் குழு, இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ்,வயது வந்தோருக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளிச்சந்தைகளில் விற்பனை செய்ய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மருந்துகளை தயாரிக்கும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவுகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; கோவின் தரவுகளை புதுப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சந்தை ஒப்புதல் என்பது மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் மட்டுமே இந்த மருந்துகள் கிடைக்கும். மருந்து கடைகளில் கிடைக்காது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE