வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா ஆழமான உறவை கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இரண்டிற்கும் இடையே நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இருந்து கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கஜகஸ்தான், கைர்க்ஸ் குடியரசு, தஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்டன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் எதிர்காலத்தில் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை இடவும் நட்புறவை பாராட்டவும் இந்த கூட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா ஆழமான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி துறையில், கஜகஸ்தான் முக்கிய பங்கை கொண்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான இலக்குகள் மற்றும் கவலைகளை கொண்டுள்ளோம். ஆப்கனில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்றைய மாநாட்டில் மூன்று இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். முதலாவதாக, பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா, மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நட்பு நாட்டிற்கு, இந்தியாவின் கொள்கைக்கு மத்திய ஆசியாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இரண்டாவதாக, நமது ஒத்துழைப்பிற்கு பயனுள்ள கட்டமைப்பை வழங்க வேண்டும். இதில், அனைத்து நாடுகளுக்கும் இடையே, வழக்கமான தொடர்புக்கான ஒரு தளத்தை நிறுவுவதற்கு வழி வகுக்கும்.

மூன்றாவதாக நமது ஒத்துழைப்பிற்கு ஒரு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற உதவும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE