மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பது போன்றது. இது கடும் கண்டனத்துக்குரியது.
டவுட் தனபாலு: 'முன்னே நீ சென்றால், பின்னே நான் வருவேன்' என்பதைப் போல, வேண்டுமென்றே சிலர், தகாத வழியில் சிலரை வழி நடத்துகின்றனர். அதற்கான உதாரணம் தான், இந்த அவமதிப்பு செயல். இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், நாடு சீரழியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: குடியரசு தின அணிவகுப்பில், சுதந்திரத்திற்காக போராடிய, உயிர்நீத்த வட மாவட்டங்களை சேர்ந்த தலைவர்களின் உருவச்சிலைகள் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
டவுட் தனபாலு: எரியிற கொள்ளியிலே, எண்ணெய் ஊத்துறதுங்கிறது இது தான். கண்ணியமான முறையில் எதையும் அணுகி, வெற்றிகரமாய் விஷயத்தை முடிப்பீங்களா... சொத்தை சொள்ளை என குறை சொல்லியே வாழ்க்கையை நடத்துவீங்களா! 'டவுட்'டா இருக்கு சார் உங்க மேலே!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: 'அரியலுார் மாவட்டம், வடுகப்பாளையம் மாணவி, விடுதிக் காப்பாளர் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஏன் இந்த காலம் தாழ்ந்த அறிக்கை? பா.ஜ.,வின் வீச்சு கூட, உங்கள் கட்சியினரிடமும், உங்களிடமும் தென்படவில்லையே! ஓங்கி எதிர்க்குரல் கொடுத்தால், புழல் பக்கம் போய்விடுவோம் என்ற பயம் உங்க எல்லாருக்கும் தொத்திடிச்சோன்னு, 'டவுட்' எழுகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE