சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் நடைமுறைகளை அரசு மாற்றியுள்ளதால் கொள்முதல் நிலையங்களில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மாவட்ட அளவில் 2.06 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்தனர். மழை, நோய் காரணமாக நெற்பயிர்கள் விளைச்சல் இன்றி சில இடங்களில் பாதிக்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை துவங்கிவிட்டனர். விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த விலையில் நெல்லை வாங்க 57 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆன்லைனில் மட்டுமே பதியவேண்டும்.
இதற்காக இ--சேவை மையங்களில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கி பதிகின்றனர். அங்கும் சில நேரங்களில் சர்வர் பழுதால் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியவில்லை. இது போன்ற நடைமுறை சிக்கலால் விளைந்த நெல்லுடன் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.இது குறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் எல்.ஆதிமூலம் கூறியதாவது, கொள்முதல் நிலையம் 24 மணி நேரமும் செயல்படவில்லை. துாசியை பிரிக்க போதிய இயந்திரங்கள் இல்லை. பெயர்களை பதிவு செய்வதில் குளறுபடி ஏற்படுவதால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர், என்றார்.