குருகிராம்:ஹரியானாவில் நிதி நிறுவனத்தில் 2.18 கோடி ரூபாய் முறைகேடு செய்து கைதான நபர், ஐந்து, 'மெர்சிடிஸ்' கார்களை வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த பிரமோத் சிங் என்பவர், ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து 28.5 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, மெர்சிடிஸ் கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கான தவணை தொகையை அவர் முறையாக செலுத்தி வந்துள்ளார். இதனால் நிதி நிறுவன அதிகாரிகளின் நம்பிக்கையை அவர் பெற்றார். இதைப் பயன்படுத்தி அவர் மேலும் நான்கு முறை கடனாக பல லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
பின், அதற்கும் அவர் சில மாதங்களுக்கு தவணை தொகையை செலுத்தி உள்ளார்.பின், அவர் திடீரென மாயமானார். அவரை தேடி நிதி நிறுவன அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். பிரமோத் சிங் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 2.18 கோடி ரூபாய் அளவுக்கு பிரமோத் முறைகேடு செய்துள்ளார்.
இது குறித்து நிதி நிறுவனம் சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.தலைமறைவாகி இருந்த பிரமோதை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.முதற்கட்ட விசாரணையில், முறைகேடு செய்த பணத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் ஐந்து மெர்சிடிஸ் சொகுசு கார்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE