தனி நாடு கேட்டு இலங்கையில் போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழகத்தில் இருந்து புதுப்பிக்கும் முயற்சிகள் நடப்பதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் மூன்று முக்கிய தமிழக அரசியல்வாதிகளையும் என்.ஐ.ஏ., கண்காணித்து வருவதாக தெரிகிறது.
உதவியது யார்?
![]()
|
நம் அண்டை நாடான இலங்கையில் தனி நாடு கேட்டு புலிகள் அமைப்பு நீண்ட காலம் போராடி வந்தது. கடந்த 2009ல் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பினருடனான போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அறிவித்தது. புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் காரணமாக, புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சி நடப்பதாக என்.ஐ.ஏ., சந்தேகப்படுகிறது.குறிப்பாக, தமிழகத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், அதற்கு மூன்று முக்கிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைத்துள்ளது.
லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கே என்ற இலங்கை பெண், கடந்தாண்டு அக்டோபரில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். புலிகள்அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.கடந்த 2019ல் இலங்கை பாஸ்போர்ட் வாயிலாக அவர் இந்தியா வந்தார். 2020 டிசம்பரில் அவரது 'விசா' காலம் முடிந்தது. கொரோனா பரவலால் மீண்டும் இலங்கை செல்ல முடியவில்லை. தான் தங்கியிருந்த வீட்டில் பெற்றிருந்த சமையல் 'காஸ்' இணைப்பு ஆவணம் உள்ளிட்டவை வாயிலாக, சென்னை மண்டல அலுவலகத்தில் இந்திய பாஸ்போர்ட்டை அவர் பெற்றுள்ளார்.
மும்பைக்கு பெங்களூரு வழியாக விமானத்தில் செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்திய பாஸ்போர்ட் தவிர, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களும் இருந்துள்ளன.இவருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கு உதவியது யார் என்பது குறித்தும் என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சந்தேகம் உள்ள இருவரது தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லட்சத்தீவுகள் அருகே, புலிகள் அமைப்பில் உளவு அதிகாரியாக இருந்த சற்குணம் என்ற செபாஸ்டியன் கடந்தாண்டு மார்ச்சில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏ.கே., - 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், 300 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.புலிகள் அமைப்பை புதுப்பிக்க பணம் திரட்ட, போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்று பக்க அறிக்கை
இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக போலீசுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு பல தகவல்களை, இந்த அமைப்பின் உயரதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் தலைமைச் செயலருக்கு, என்.ஐ.ஏ., உயரதிகாரிகள் மூன்று பக்க அறிக்கையை சமீபத்தில் அனுப்பிஉள்ளனர். அதில், தமிழகத்தில் இருந்து தங்கள் அமைப்பை மீண்டும் புதுப்பிக்க புலிகள் முயற்சித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
எல்லை மாநிலமாக உள்ளதாலும், தங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதாலும், தமிழகத்தில் அமைப்பை புதுப்பிக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.சில குறிப்பிட்ட தகவல்கள் குறித்து 15 நாட்களுக்குள் விசாரித்து பதிலளிக்கும்படியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.புலிகள் அமைப்பு மற்றும் பிரபாகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் மூன்று முக்கிய தமிழக அரசியல்வாதிகள், புலிகளின் முயற்சிக்கு உதவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அவர்களை கண்காணிக்கும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் 15 நாட்களுக்குப் பின் சென்னை வந்து விசாரணையை முடுக்கிவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE