சென்னை :'நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவுக்கு, கவர்னர் விரைவில் இசைவு அளித்து, மத்திய அரசுக்கு அனுப்பி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு துணை நிற்பார் என நம்புகிறேன்' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழக கவர்னர், 'பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல, தமிழக பள்ளி மாணவர்களும், பிற இந்திய மொழிகளை படிக்க வேண்டும். 'பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது சரியல்ல' என, தன் குடியரசு தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில், அவரது செய்தி உள்ளது. தமிழகத்தில் ஹிந்திக்கு எதிரான மொழிப் போராட்டம் நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. நேரு வாக்குறுதிதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தான், 'ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாத வரை, கட்டாயமாக ஹிந்தியை திணிக்க மாட்டோம்' என, முன்னாள் பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார்.அதன்பின், 1967ல் தி.மு.க., ஆட்சி அமைந்தபோது, 'தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெறும், இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இன்று வரை இரு மொழிக் கொள்கைகடைப்பிடிக்கப்படுகிறது.இதனால், தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியிலோ, பெரும் பொறுப்புகளில் அவர்கள் இடம்பெறும் வாய்ப்புகளிலோ பின்னடைவு இல்லை என்பதை, கவர்னர் நன்கு அறிவார் என நம்புகிறேன்.நீட் தேர்வால், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ்., தகுதிப் பட்டியலில், முதல் 1,000 இடங்களில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் 579 பேர்; மாநில பாடத்திட்ட வாரியத்தில் படித்த 394 பேர்; ஐ.சி.எஸ்.சி., போன்ற பிற பாடத்திட்டத்தில் படித்த 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்தப் பாகுபாட்டை களைய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும். எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு தான். சட்ட முன்வடிவுநீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். அதன் அடிப்படையில், தமிழக சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.கவர்னர் அந்த சட்ட முன்வடிவிற்கு இசைவு அளித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, தமிழக முதல்வரின் முன்னெடுப்பு களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் என நம்புகிறேன்.இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE