தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விசாரணை நடத்துவதற்கு, பா.ஜ., மேலிடக்குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது. இந்த குழுவில் பிரபல நடிகையும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி இடம் பெற்று உள்ளார்.பா.ஜ., தேசிய பொதுச்செயலரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து உள்ளது கவலை அளிக்கிறது. துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தின் அடிப்படையில் இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது மிகுந்த வருத்தம்அளிக்கிறது.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரித்து, விரைவில் அறிக்கை தருவதற்காக, நான்கு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் குழுவில் மத்திய பிரதேச எம்.பி., சந்தியா ரே, தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், நடிகையுமான விஜயசாந்தி. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா தைவா, கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் இடம்பெறுவர். இந்தக் குழு, தமிழகத்துக்குச் சென்று மாணவியின் தற்கொலை விவகாரத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் சேகரித்து, பா.ஜ., தலைமைக்கு அறிக்கையாக அளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூட்டணியினர் தயங்குவது ஏன்?டில்லியில் நேற்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறையே உரிய விசாரணை நடத்துமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனாலும் மதமாற்ற முயற்சி நடந்ததா, இல்லையா என்ற கோணத்தில் அந்த விசாரணை இருக்குமா என தெரியவில்லை.இதற்கான உத்தரவாதத்தையும் அமைச்சர் தரவில்லை. இதன்மூலம் இந்த சம்பவத்தை தமிழக அரசு கையாளும் விதத்தில், தீவிர சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.அனைத்து உண்மைகளையும் முழுவீச்சில் தமிழக அரசு தன் விசாரணை மூலம் ெவளிக்கொண்டு வருமா என தெரியவில்லை.கருத்து தெரிவிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவருமே மதமாற்ற முயற்சி எதுவும் நடக்கவில்லை என்கின்றனர். விசாரணை நடத்தி முடிப்பதற்கு முன், இவர்கள் ஏன் ஒரே மாதிரி பேச வேண்டும்?இந்த விவகாரத்தில் மதமாற்றம் குறித்த ஏதாவது விஷயங்கள் நடந்திருந்தால், அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கூற, தி.மு.க., கூட்டணி கட்சியினரும் ஏன் தயங்குகின்றனர்?ஏற்கனவே பல மாணவியர் உயிரிழந்தபோதெல்லாம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின விதம் விதமான விசாரணை கேட்டது பலருக்கும் நினைவிருக்கும்.அப்படிப்பட்ட முதல்வர் தற்போது இந்த விவகாரத்தில் மட்டும் வாய் திறக்கவே இல்லை. இந்த விஷயத்தில் அவரது கருத்து என்ன என்பது தெரிய வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்த முதல்வர் வழிவிட வேண்டும்.மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ., சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வேண்டும். மேலும், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE