உலகில் கார்பன் வெளியீடு அளவை குறைப்பதில் அமேசான் காடுகளுக்கு முக்கிய பங்குள்ளது. காடு அழிப்பு, பருவநிலை மாற்றம் காரணமாக அமேசான் காட்டின்
கார்பன் (கரியமிலவாயு) ஈர்க்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகின் பெரிய காடு அமேசான். பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ. இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது. இதற்கடுத்து பெருவில் 13%, கொலம்பியாவில் 10% உள்ளது. மீதி 17 சதவீதம் பொலிவியா, ஈக்குடார், பிரெஞ்சு கயானா, கயானா, வெனிசுலாவில் பரவி உள்ளது.
அமேசானின் தென் கிழக்கு பகுதி (பிரேசில்) மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. இங்கு அதிகளவில் மரங்கள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளன. இதனால் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இப்பகுதியில் கோடை காலத்தில் வெப்பநிலை உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வெளியான ஆய்வில் 2010 - 2019 இடையிலான காலத்தில் பிரேசில், முந்தைய அளவை விட 20 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நடத்திய ஆய்வுக்காக அமேசான் காடுகளில் 600 இடங்களில் விமானம் மூலம் காற்று மாதிரியை சேகரித்தனர். 'இதில் மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் (பிரேசில்) 30 சதவீதம் காடுகள் அழிப்பு நடந்துள்ளது. மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் 10 மடங்கு கூடுதல் கார்பன் வெளியீடு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவின் அளவிலும் வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் வெப்பநிலை என்பது ஆண்டின் இரண்டு வெப்பமான மாதங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது உலக மக்களுக்கும் பிரேசிலுக்கும் கவலையளிக்கும் செய்தி' என பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி லுாசியானா காட்டி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE