புதுடில்லி :“தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,” என, மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது:கர்நாடகா, கேரளா, தமிழகம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

'ஆக்சிஜன்' தேவை
மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, ஒடிசா, ஹரியானா மற்றும் மேற்கு வங்கத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் சிலருக்கு மட்டுமே, 'ஆக்சிஜன்' தேவைப்படுகிறது.சிலருக்கு மட்டுமே ஐ.சி.யூ.,வில் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. முன்பு இருந்ததைப் போல் அல்லாமல் குறைந்த உயிரிழப்புகளே தற்போது பதிவாகின்றன.எனினும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம்.
சில இடங்களில் கொரோனா பாதிப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், இதர நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் என, 97.03 லட்சம் பேருக்கு, 'முன்னெச்சரிக்கை' டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒமைக்ரான் உயர்வு
என்.சி.டி.சி., எனப்படும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் சிங் கூறியதாவது:கடந்த டிசம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.கடந்த டிசம்பரில் 1,292 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 9,672 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE