புதுடில்லி : 'மத்திய அரசின் நெருக்கடிக்கு பயந்து, சமூகவலைதள நிறுவனமான, 'டுவிட்டர்' ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது' என்ற, காங்., - எம்.பி., ராகுலின் புகாரை,
அந்த நிறுவனம் மறுத்துள்ளது. சமூக வலைதளமான 'டுவிட்டர் இந்தியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:
டில்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து, என் டுவிட்டர் கணக்கில் பிரச்னை துவங்கியது. டுவிட்டரில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம். மத்திய அரசின் நெருக்கடிக்கு பயந்து இந்தியாவின் பன்முகை தன்மையை அழிக்கும் செயலில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு ராகுல் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான போலி கணக்குகளை அகற்றி வருகிறோம். எனவே, ஒரு கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் தான். டுவிட்டர் தளம் ஒருதலைப்பட்சமாக எப்போதும் செயல்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE