கோவை:கோவைக்காக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த பாலங்கள், இன்னும் அந்தரத்தில் நிற்கின்றன. தற்போதைய தி.மு.க., ஆட்சியிலாவது அப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
சென்னைக்கு அடுத்தபடியாக, பெருநகரமாக கோவை வளர்ந்து வருவதால், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது ஆட்சிக்காலத்தில் உத்தரவிட்டார். அதில், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, முக்கிய சாலைகளில் பாலங்கள் கட்டும் திட்டத்தை அறிவித்தார்.
ஈச்சனாரி, நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதுார், வெள்ளலுார், வாலாங்குளம் பாலங்கள் கட்டப்பட்டன. அவரால் அறிவிக்கப்பட்ட பாலங்களில் காந்திபுரம் மற்றும் ஆவராம்பாளையம், பீளமேடு பாலங்கள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கட்டி முடிக்கப்பட்டன.ஆனால், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஹோப் காலேஜ் - விளாங்குறிச்சி ரோடு, நீலிக்கோணாம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் துவங்கப்பட்ட பாலம் வேலை, பாதியில் நிற்கிறது.
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு போதிய நிதி ஒதுக்கியும், அணுகு சாலைக்கான நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பும் இழுபறி நீடிக்கிறது.ஹோப் காலேஜ் ரோட்டில், ரயில்வே பகுதியில் பாலம் கட்டப்பட்டு விட்டது. இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, இணைப்பு பாலங்கள் கட்ட வேண்டும். இரு நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்திருப்பதால், இப்பாலமும் அந்தரத்தில் நிற்கிறது.நீலிக்கோணாம்பாளையத்தில் ரயில்வே தண்டவாளம் கடக்கும் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இரு புறமும் நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவே இல்லை.இவை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டங்கள் என்பதால், தற்போதைய அரசு கூடுதல் சிரத்தை எடுத்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இப்பாலங்கள் முழுமை பெற்றால், போக்குவரத்து சிரமம் குறையும்.கண்டிப்பாக நிறைவேற்றுவோம்!இதுதொடர்பாக, சிங்காநல்லுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., (தி.மு.க.,) கார்த்திக்கிடம் கேட்ட போது, ''எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக, இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஹோப் காலேஜ் பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, இருவர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் பேச்சு நடத்தி வருகிறோம். நீலிக்கோணாம்பாளையம் பாலம் கட்டுவதற்கு, திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது.
சட்டசபை தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதால், கண்டிப்பாக நிறைவேற்றுவோம்,'' என்றார்.வழக்கும், வாபஸ்சும்!சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., (அ.தி.மு.க.,) ஜெயராம் கூறுகையில், ''எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையினரே மேல்முறையீடு செய்து, இப்போது வழக்கை வாபஸ் பெற்றிருக்கின்றனர்.
ஹோப் காலேஜ் பாலம் வேலையை துவக்க, ஏற்கனவே பூமி பூஜை போடப்பட்டு விட்டது. குடிநீர் வடிகால் வாரியம் குழாய் பதிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கு தொடர்ந்தவர்கள் நிலம் தர தயாராக இருக்கின்றனர்.தேவையான நிலத்தை ஒரே புறம் கையகப்படுத்த வேண்டும்; இருபுறமும் எடுக்கக்கூடாது என கோரியுள்ளனர். நீலிக்கோணாம்பாளையத்தில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரயில்வே பாலம் வேண்டாம்; சுரங்கப்பாதை அமைத்து தர கோருகின்றனர்,'' என்றார்.எப்படியோ... வேலை நடந்தால் சரி!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE