வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
எஸ்.பாண்டி, முக்கூடல், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்கள் நலன் அடிப்படையில் மொழி கொள்கையை பார்க்க வேண்டும்; மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், 'மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது' என பதில் அளித்துள்ளார்.
இந்த இடத்தில் நாம், தி.மு.க.,வின் சில கொள்கைகளை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அக்கட்சி தலைவர்கள், 'ஒரு நாள் மத்திய அரசில் நாம் அங்கம் வகிப்போம்; நல்ல 'பசை'யுள்ள துறைகளை பிடிவாதமாக கேட்டு பெற்று வளம் பெறுவோம்' என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இப்படியே, 'தமிழ்-, தமிழ்...' என்று சொல்லி, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியபடி பிழைப்பை நடத்தி கொண்டிருக்கலாம் என்று தான் கருதினர்.
அக்கால கட்டத்தில், தி.மு.க.,விற்கு இந்த ஹிந்தி எதிர்ப்பு கொள்கை மிகுந்த பலத்தையும், செல்வாக்கையும் கொடுத்தது என்றால் மிகையில்லை. ஆனால் பதவிக்காக, கொள்கைகளை விட்டுக் கொடுக்க தயங்காத கட்சி என்று ஒன்று உண்டென்றால், அது இந்தியாவிலேயே தி.மு.க., தான். 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு!' என்று முழங்கியவர்கள், தேசத் துரோகச் சட்டம் பாயும் என்றதும், சத்தமில்லாமல் அந்த திராவிட நாடு கோரிக்கைக்கு சமாதி கட்டினர்.
ஒரு காலகட்டத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு வந்ததும், கருணாநிதியின் நேரடி வாரிசுகளில் ஒருவரான கனிமொழிக்கும், ஒன்றுவிட்ட வாரிசான தயாநிதிக்கும் ஹிந்தி எழுத, படிக்க, பேச கற்றுக் கொடுத்தனர். அதோடு, இந்த ஹிந்தியை வைத்து பணம் பண்ணலாம் என்ற சூட்சுமத்தை உணர்ந்ததும், உடனடியாக கல்வி நிறுவனங்களை துவக்கினர். அவற்றில், ஹிந்தியை பயிற்றுவிக்க துவங்கினர். அதே நேரம், நம் பிள்ளைகள் ஹிந்தியை பயில முடியாதவாறு, 'இருமொழி கொள்கை' என்று பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க.,வினரே...தயாநிதியும், கனிமொழியும், சிவாவும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எந்த கட்சி தலைமையோடும், அமைச்சர் பெருமக்களோடும் மொழி பெயர்ப்பாளர் துணையின்றி, தாங்களே நேரடியாக அளவளாவி பேச்சு நடத்த முடியும். ஏனைய டி.ஆர்.பாலு போன்றவர்களால், அது போல டில்லியில் யாரிடமாவது கலந்துரையாட முடியுமா? இன்னும் எதற்கு இந்த வீண் வீறாப்பு?
'கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?' என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, 'ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஹிந்தி பிரசார சபா, முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் 'சன் ஷைன்' பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது' என்று, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பதில் அளித்துள்ளார்.
அதோடு, 'ஹிந்தி கற்பதால், மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்' என்றும் அவர் கூறி இருக்கிறார்.அப்படி எந்த மாணவர் அய்யா, தி.மு.க., தலைமையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்? அந்த இருமொழி கொள்கை திட்டத்தை, சன்ஷைன் பள்ளியில் ஏன் அமல்படுத்தவில்லை? கொள்கையாவது, வெங்காயமாவது? துட்டு மாமே... துட்டு, துட்டு!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE