தேசிய நிகழ்வுகள்:
ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: ரயில் தண்டவாளம் சேதம்
கிரிதி: ஜார்க்கண்டில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் சிச்சாக்கி - சவுதரிபந்த் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில், நேற்று நள்ளிரவு நக்சலைட்டுகள் சிலர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் தண்டவாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தை ஆய்வு செய்து, அதை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று ஹவுரா - டில்லி இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன; ஹஜாரிபாக் மாவட்டத்தில் இரண்டு மொபைல் போன் கோபுரங்களும் தகர்க்கப்பட்டன. இது நக்சல்களின் நாச வேலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து உள்ள போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
246 பயங்கரவாதிகள் அசாமில் சரண்
கவுகாத்தி:அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு ஐக்கிய கூர்க்கா மக்கள் இயக்கத்தை சேர்ந்த 169 பேர் மற்றும் திவா விடுதலை ராணுவத்தை சேர்ந்த 77 பேர் என மொத்தம் 246 பயங்கரவாதிகள், முதல்வர் ஹிமந்த பிஸ்வா முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்கள் தங்களிடம் இருந்த 277 துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மும்பையில் ரூ.7 கோடி கள்ள நோட்டு பறிமுதல்
மும்பை: மும்பையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்தனர்.
மும்பை புறநகர் பகுதியான தாஹிசார் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் கார் ஒன்றை சோதனையிட்ட போது, ஏராளமான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என தெரியவந்தது. காரில் இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மும்பை புறநகரான மேற்கு அந்தேரியின் ஹோட்டலில் பதுங்கி இருந்த மூவரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து மேலும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் கள்ள நோட்டுகளை அச்சிட்டு அதை பல்வேறு மாநிலங்களிலும் வினியோகித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
ரூ.2,873 கோடி முறைகேடு
புதுடில்லி: வாடிக்கையாளர்களின் பங்குகளை அடகு வைத்து வங்கிகளில் கடன் வாங்கி 2,873 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, பிரபல பங்குச் சந்தை நிறுவனமான 'கார்வி'யின் தலைவர் - நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியை, அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
அருணாச்சல் - அசாம் எல்லையில் துப்பாக்கிச்சூடு
இடாநகர்: நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சல் மற்றும் அசாம் எல்லையில், லிகாபாலி முதல் துர்பாய் என்ற இடம் வரை 70 கி.மீ., துாரத்திற்கு மத்திய அரசு நிதியுதவியுடன் அருணாச்சல் அரசு சாலை அமைக்கிறது. இதற்கான பணிகளை தேமாஜி மாவட்டத்தில் ஹிம் பஸ்தி என்ற கிராமத்தில் ஒப்பந்ததாரர் நேற்று துவக்கினார். அப்போது கிராம மக்கள் சாலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் துப்பாக்கியால் சுட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீஸ் மற்றும் இரு மாநில அரசு உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக நிகழ்வுகள்
ஆபாச வீடியோ: 'காமுகன்' கைது
சென்னை: மொபைல் போனில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி, மொபைல் போனை எடுத்து ஆராய்ந்துள்ளார்.அதில், தன் தங்கை மற்றும் சில பெண்களின் உடை மாற்றும் வீடியோ உள்ளிட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். இது குறித்து, திருவொற்றியூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனைவியின் புகாரின் படி, கணவரை போலீசார் கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். ஆபாச வீடியோ எடுத்த கணவர் மீது, புகார் கொடுத்த மனைவியை போலீசார் பாராட்டினர்.
துபாயிலிருந்து வந்த விமானத்தில் தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை : துபாயில் இருந்து சென்னை வந்த தலைமறைவு குற்றவாளி நிஜாமுதீனை, விமான நிலையத்தில் குடியுரிமை அதி காரிகள் கைது செய்தனர்.
'பிளை துபாய்' என்ற சிறப்பு பயணியர் விமானம், துபாயில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 156 பயணியர் வந்தனர். அவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த, சென்னை மண்ணடியை சேர்ந்த நிஜாமுதீன், 42, என்ற பயணி, அமலாக்க துறையினரால் தேடப்பட்டு வரும், தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது. குடியுரிமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிஜாமுதீன் அளித்த பதில் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது.அதைத் தொடர்ந்து அவரை, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளிடம், குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாயை தாக்கிய மகனுக்கு சிறை
கோவை: அன்னூர் அருகே தாயை கட்டையால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ருத்திரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மரகதம், 42. இவரது மகன் ஞானபிரகாஷ், 23. டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஞானபிரகாஷ் குடித்துவிட்டு வந்து, எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்து, அரிவாள்மனை கட்டையால், தாயை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். ரத்த காயம் அடைந்த மரகதம், அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானப்பிரகாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.2.16 கோடி நுாதன மோசடி; பெங்களூரு வாலிபர் கைது
சென்னை: குறைந்த விலைக்கு கார்கள் வாங்கித் தருவதாக, 2.16 கோடி ரூபாய் மோசடி செய்த, பெங்களூரு வாலிபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நவீன், 31. இவர், சென்னை கே.கே.நகரில், 'பாரத் பெங்களூரு புட்பால் கிளப்' நடத்தி வந்தார். இவர், சென்னையைச் சேர்ந்த குமரவடிவேல் என்பவரிடம்,'முன்னணி நிறுவனங்களின் புதிய கார்களை, 30 சவீதம் குறைவான விலையில் உங்களுக்கு வாங்கித் தருகிறேன்' எனக் கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பி, குமாரவடிவேல் மற்றும் நண்பர்கள், 19 கார்கள் வேண்டும் என, விலை பேசி, 2.16 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், நவீன் கார்கள் வாங்கித் தராமலும், பணத்தை தராமலும் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, குமாரவடிவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நவீனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளியில் சில்மிஷமா? 3 ஆசிரியர்களுக்கு 'மெமோ'
வேடசந்தூர் : அரசு பள்ளித் தலைமையாசியர்களிடையே 'சில்மிஷ' பிரச்னை தொடர்பாக, மூன்று ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே நாககோனானூர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ராதாராணி. அருகே வெரியம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை.இருவரும் நாககோனானுார் நடுநிலைப்பள்ளியில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக தலைமையாசிரியர் அண்ணாதுரை, மற்றொரு பள்ளி ஆசிரியையிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அத்தகவலும் வெளியில் பரவியது. இதையடுத்து நாககோனானூர் பொதுமக்கள், தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு கொடுக்க சென்றனர். அலுவலர் இல்லாததால் காந்தி சிலையிடம் மனுவை கொடுத்து திரும்பினார்.இந்நிலையில் சில்மிஷ சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் தாசில்தார் பலி
தஞ்சாவூர்: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தாசில்தார் பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; தஞ்சாவூர் முத்திரைத்தாள் கட்டண தாசில்தார். பட்டுக்கோட்டை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.நம்பிவயலில் இருந்து பட்டுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு, நேற்று முன்தினம் தன் 'யமஹா' பைக்கில் கிளம்பினார்.அப்போது, சூரப்பள்ளம் பை - பாஸ் சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, ரமேஷ் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே இறந்தார்.
சிக்கியது சிறுத்தை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பாப்பான்குளத்தில், கடந்த 24ல் சோளத்தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை வன ஊழியர் உட்பட ஐந்து பேரை தாக்கியது. சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நான்கு நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தையை, வனத்துறையினர் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிறுத்தைக்கு 3 முதல் 4 வயது இருக்கும். சிறுத்தையை கூண்டில் ஏற்றி, அடர் வனப் பகுதியில் விடுவதற்காக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
ரூ.4 கோடி மோசடி: நகை கடை அதிபர் ஓட்டம்
சேலம்:சேலத்தில் நகை, பணம் என, 4 கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடை உரிமையாளர் மாயமான நிலையில், அவரது மாமனார் வீட்டை, பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம், வீராணம், அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ், 40. இவரது மனைவி லலிதா, 38. சேலம் டவுன் ராஜகணபதி கோவில் அருகே தங்கராஜ், 'லலிதாம்பிகை ஜூவல்லரி' என்ற நகை கடை நடத்தினார்.அங்கு, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 3,000 ரூபாய் வட்டி; 6 சவரன் நகை வழங்கினால், மாதம் 2,500 ரூபாய் வட்டி; நகை, ஏல சீட்டுகளில் சேர்ந்தால் கவர்ச்சிகர பரிசு' எனக் கூறி, மக்களிடம் முதலீடுகளை பெற்றார்.சுற்றுவட்டார பகுதி மக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பணம், நகை வழங்கினர்.
கடந்த டிசம்பர் முதல், நகை சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணம் திருப்பி தரவில்லை. நேற்று முன்தினம், கடையில் இருந்த நகைகளை அள்ளிக் கொண்டு, 'இனோவா' காரில் மனைவியுடன் மாயமானார்.'கடை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மூன்று நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது' என, கடை முன் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தம்பதி மாயமானதை அறிந்த மக்கள், நேற்று பொன்னம்மாபேட்டை, சக்தி நகரில் உள்ள தங்கராஜின் மாமனார் தேவராஜ், 65, வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை போலீசார் பேச்சு நடத்தி, கலைந்து போக செய்தனர். முதல் கட்ட விசாரணையில், 4 கோடி ரூபாய் பணம், நகை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. மேலும், சேலம் மாவட்டம், ஏற்காடு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் செயல்பட்டு வந்த கிளைகள் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.
200 பைக் திருடிய இருவர் கைது
வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், 200 பைக்குகள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் வடக்கு குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலுார் கிரீன் சர்க்கிள் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக ஒரே பைக்கில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த அஜித்குமார், 33, காந்திநகரை சேர்ந்த இந்திராகுமார், 24, என்பதும் பைக் திருடர்களான அவர்கள், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் ஆறு மாதங்களில், 200 பைக்குகளை திருடியதும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, ஒன்பது பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
![]()
|
சேதமடைந்த குடியிருப்பு இடிந்து 2 மாணவர் பலி
கடலூர், :கடலூர் அருகே, பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கடலூர், ராமாபுரம் அடுத்த வண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வீரசேகர், 17; புவனேஸ்வரன், 17; எஸ்., புதூரைச் சேர்ந்தவர் சுதீஷ்குமார், 17. மூவரும் அருகில் உள்ள வெள்ளக்கரை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தனர்.வீரசேகர் உள்ளிட்ட மூவரும், வண்டிக்குப்பம் சமத்துவபுரம் அருகே இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்டு பழுதான வீடுகளின் அருகே, நேற்று பகல் 12:00 மணிக்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில், கட்டடத்தின் பக்க சுவர்களும் இடிந்து கட்டடம் தரைமட்டமானது.வீரசேகர் உள்ளிட்ட மூவரும் இடிபாடுகளில் சிக்கினர். சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், ஒரு மணி நேரம் போராடி மூவரையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், வீரசேகர், சுதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த புவனேஸ்வரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உலக நிகழ்வுகள்:
27 கடத்தல்காரர்கள் கொலை
அம்மான்: ஜோர்டான் ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் நடத்திய தாக்குதலில் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜோர்டான் - சிரியா எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ராணுவ வீரர்களுக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு ராணுவ அதிகாரி உயிர்இழந்தார். இந்நிலையில் நேற்று சிரியாவில் இருந்து ஜோர்டான் எல்லைக்குள் கடத்தல்காரர்கள் நுழைய முயற்சித்தனர். ராணுவத்தினர் எச்சரித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE