ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு, நவமலை பகுதியில், ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிவதால், வனத்துறையினர் யானையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி, ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி, சின்னாறுபதி, நவமலை பழங்குடியின மற்றும் மின்வாரிய குடியிருப்பு பகுதிகளில், கடந்த, ஒரு வாரமாக ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை பெரும்பாலான நேரங்களில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டை கடக்கிறது.நேற்று முன்தினம், சின்னாறுபதி, நவமலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால், பழங்குடியினர் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து, வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில், 10 பேர் கொண்ட குழு, இரவு, பகலாக யானையை கண்காணித்து வனத்தினுள் விரட்டினர்.வால்பாறை செல்வோர் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தாமல், பாதுகாப்பாக செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.