வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: மாணவி தற்கொலை விவகாரத்தில், வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், விடுதி வார்டன் கணக்குகளை எழுதக் கூறி கொடுமைப்படுத்தியதால், தற்கொலைக்கு முயன்றதாக, நேற்று மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, கடந்த 19ம் தேதி இறந்தார். திருக்காட்டுள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். சிசிச்சையில் இருந்த மாணவி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலுார் மாவட்டச் செயலர் முத்துவேல் எடுத்த வீடியோவில், தன்னை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி இருவரும் வற்புறுத்தியதாகவும், தான் மதம் மாறவில்லை என்பதால், தன்னை டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார்.
அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, முத்துவேல் மொபைல் போன், சென்னைக்கு தடயவியல் சோதனைக்காக அனுப்பப் பட்டு உள்ளது.இதன் அறிக்கை இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட, 2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட மற்றொரு வீடியோ, நேற்று காலை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் மாணவி பேசியிருப்பதாவது:எப்போதும் நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்ப சூழ்நிலையால், பள்ளிக்கு போக முடியவில்லை. கொஞ்சம் லேட்டாக தான் போனேன். ஆகையால், சிஸ்டர் கணக்கு பார்க்க சொல்லுவார். நான் லேட்டா தானே வந்தேன்; அப்புறமாக எழுதி தருகிறேன் எனக் கூறினாலும் கேட்க மாட்டாங்க.
பரவாயில்லை எழுதிக் கொடுத்து விட்டு வேலையை பார் எனக் கூறி, என்னை எழுத சொல்லி விடுவர். நான் கரெக்டா எழுதினாலும், தப்புனு சொல்லி ஒரு மணி நேரம் உட்கார வைச்சிருவாங்க. அதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், மார்க் கம்பியானதால், இப்படி போனா படிக்க முடியாது என நினைச்சு தான் விஷம் குடிச்சேன்.இவ்வாறு மாணவி கூறி உள்ளார். தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்.
மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?
மாணவி: சகாயமேரி
மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?
மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.
மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?
மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.
மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?
மாணவி: அப்படி எல்லாம் இல்ல.
மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?
மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.
மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?
மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துவேலிடம் வாங்கிய மொபைல் போன், சென்னை தடயவியல் நிபுணர்களிடம், ஆய்வுக்காக சென்று, அதன் முடிவுகள் ரகசியமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முன், நேற்று வெளியான வீடியோ யார் மூலம், எப்போது, எங்கு வெளியானது? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.மாணவியிடம், இன்னும் எத்தனை வீடியோ எடுக்கப்பட்டது. அவை, யார் யாரிடம் உள்ளன? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சித்தி கொடுமையா?
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது தந்தை, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், 2020ம் ஆண்டு ஜூலை 18ல், அரியலுார் மாவட்ட சைல்டு லைன் 1098 எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் போன் எண்ணுக்கு, மாணவியை, அவரது சித்தி அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் வந்தது.
சைல்டு லைன் உறுப்பினர்கள், மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, மாணவி, தன் சித்தி அடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, தொடர்ந்து நான்கு மாதங்கள் நான்கு முறை சைல்டு லைன் உறுப்பினர்கள் மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று, கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போதும் மாணவி, சித்தி கொடுமைப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
அரியலுார் மாவட்ட சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் என்பவர், இந்த தகவலை, அறிக்கையாக தயார் செய்து, 'சீல்' வைத்து, அரியலுார் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கொடுத்துள்ளார். அதை அவர், தஞ்சாவூர் எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் நேற்று வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE