மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலுக்கு இன்று (ஜன.,28) காலை 10:00 மணி - மாலை 5:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதிகபட்சம் 2 வாகனங்களில் வரலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ஆண்கள் 6,52,617, பெண்கள் 6,75,139, மூன்றாம் பாலினத்தவர் 138 என மொத்தம் 13,27,894 வாக்காளர்கள் உள்ளனர். 1317 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. தேர்தல் பணிக்காக 4 மண்டலங்களில் வார்டுகள் வாரியாக 12 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இன்று காலை 10:00 மணி - மாலை 5:00 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதிகபட்சம் 2 வாகனங்களில் வரலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் ஒருவருக்கே அனுமதி. கொரோனா பாதித்தவர்கள்தங்கள் பிரதிநிதி மூலம் மனு தாக்கல் செய்யலாம்.தமிழக தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி உதவி தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பித்து, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்தவிர பிற பகுதிகளில் பிரசாரம் செய்யலாம். தேர்தல் நடத்தை விதி புகாரை 0452 - 2310011, 2310022, 2310033, 2310044 அல்லது கலெக்டர் அலுவலக புகார் எண் 1800 425 7861க்கு கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஓட்டு எண்ணும், பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு கேமரா குறித்து ஆய்வு செய்தனர். உதவி கமிஷனர்கள் தட்சிணா மூர்த்தி, அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், ரவிச்சந்திரன் உதவி செயற் பொறியாளர் சுப்புத்தாய், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், மனோகரன், அலெக்ஸ்சாண்டர், முருகேசபாண்டியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.