முன்னாள் சபாநாயகரும், அவிநாசி எம்.எல்.ஏ.,வும் ஆன தனபால், திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச் லேண்ட் 12வது வீதியில் குடும்பத்தினருடன், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
![]()
|
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன், சேலம் சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நேற்றுமுன்தினம் நள்ளிரவு, கதவு தாழ்ப்பாளை நெம்பி உடைத்து, வீட்டின் உள்ளே புகுந்தனர். அறைக்குள் பீரோ, சாவியுடன் இருந்தது. பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள் உட்பட பொருட்களை திருடியுள்ளனர்.
இவரது வீடு அருகே, உதவியாளர்கள், மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். அங்கும் ஆள் இல்லாததால், அந்த வீட்டின் கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். அருகில் வசித்தவர்கள், சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, திருடர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்து தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.போலீசார் அப்பகுதி 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர், ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றது தெரியவந்தது.
![]()
|
அரசியல் காரணம்?
போலீசார் கூறுகையில், 'அவிநாசி தொகுதிக்கு வரும்போது, குடும்பத்தினருடன் தனபால் இங்கு தான் தங்கி வந்தார். வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விளக்கு எரியாததால், வீட்டில் யாரும் இல்லை என்பதையறிந்து, இங்கு திருட திட்டமிட்டிருக்கலாம். பீரோவில் உள்ள பொருட்களை கலைத்து போட்டுள்ளனர்.
தனபால், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் என்பதால், வேறு ஏதேனும் ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் திருடர்கள் வந்தனரா, வந்தவர்கள் திருடர்கள் தானா, அரசியல் காரணங்கள் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE