சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் துயரமானது. அதில் மத சாயம் பூசி அரசியல் செய்ய பா.ஜ., நினைக்க கூடாது. மதமாற்றம் தனி மனிதனின் நம்பிக்கை, விருப்பு, வெறுப்பை பொறுத்தது. இதில் அரசியல் செய்வதை பா.ஜ., நிறுத்தி கொள்ள வேண்டும்.
நல்ல கருத்து தான்... அதே நேரம், தனி மனிதர்களை மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்ய வைக்கிறது குற்றமா, இல்லையான்னு தெளிவா சொல்லுங்க...!
அய்யா வைகுண்டர் கட்சி தலைவர் முத்து ரமேஷ் அறிக்கை: நம் நாட்டின் தேசியக் கொடியை களங்கப்படுத்தும் வகையில், 'அமேசான்' நிறுவனம், காலணி மற்றும் முக கவசங்களில், நம் நாட்டின் தேசியக் கொடியை பதிவு செய்துள்ளது. தேசியக் கொடியை அவமதித்த, அமேசான் நிறுவனத்தை, முழுமையாக தடை செய்ய வேண்டும்.
கார்ப்பரேட் கலாசாரத்துல இதெல்லாம் நடக்கிற காரியமா... நாம வேணும்னா, அமேசான்ல பொருட்கள் வாங்க மாட்டோம்னு கட்டுப்பாட்டோட இருந்தா தான் உண்டு...!
அ.தி.மு.க., அமைப்பு செயலர் சுதா பரமசிவன் பேட்டி: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 2001 தேர்தலில் வெறும் 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நயினாரை அமைச்சர் ஆக்கினார். அ.தி.மு.க.,வை குறை கூற, நயினாருக்கு எந்த தகுதியும் இல்லை. அ.தி.மு.க.,வை விமர்சித்தால், அவர் திருநெல்வேலி வரும்போது எங்களது கட்சியினர், நயினாருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர்.
மத்தியில ஆட்சியில இருக்கிற கட்சி, அதுவும் இன்னைக்கு வரை உங்க கூட்டணியில இருக்கிற கட்சியின் எம்.எல்.ஏ.,வை எதிர்த்து, கறுப்பு கொடி போராட்டமா...? அது சரி... இதுக்கு உங்க தலைமை அனுமதி தரும்னு நினைக்குறீங்களா...?
அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், என் மீதான குற்றச்சாட்டு தொடர்பான போலீசாரின் வழக்கு குறித்து கருத்து கூற இயலாது.

உங்க கட்சியினர் இந்த மாதிரி வழக்குல சிக்குனா, 'இது பொய் வழக்கு... சட்டப்படி சந்திப்பேன்... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மறுபடியும் தர்மமே வெல்லும்'னு டயலாக் பேசுவாங்களே... உங்களுக்கு, உங்க கட்சியினர் சரியா பயிற்சி குடுக்கலை போல...!
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: தமிழக அரசு, ஒரு யூனிட் ஆற்று மணல், 1,000 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இதனால், ஆற்று மணல் அள்ளும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.
இப்ப மட்டும் ஆத்துல மணல் பாதுகாப்பா இருக்குதா...? திருட்டுத்தனமா அள்ளிட்டு போறதை தடுக்க தான், அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கு... அதை ஏன் எதிர்க்குறீங்க...?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE