திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித்தொண்டர்கள் அணிவதற்கான, 'டி சர்ட்' தயாரிக்க திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தயாராகிவிட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு, கட்சியினர் தயாராகிவிட்டனர். கட்சி சின்னம், தலைவர்கள், வேட்பாளர் படங்கள் பொறித்த 'டி -சர்ட்'களை அணிந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 'டி- - சர்ட்' தயாரிப்புக்கு ஆயத்தமாகிவிட்டனர்.

ஆடை உற்பத்தியாளர் சதீஷ்குமார் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலுக்காக, வெள்ளை, சிவப்பு, பச்சை நிற பிளைன் 'டி -சர்ட்'களை அதிக எண்ணிக்கையில் தயாராக வைத்துள்ளோம். ஆர்டர் அடிப்படையில், கட்சி தலைவர், சின்னம், வேட்பாளர் படம், வாசகங்களை பிரின்டிங் செய்து கொடுத்துவிடுவோம். ஆர்டர் வழங்கிய இரண்டே நாட்களில், 'டி-சர்ட்' தயாராகிவிடும்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து தி.மு.க., - அ.தி.மு.க., -- பா.ஜ., என, அனைத்து கட்சியினரும், 'டி-சர்ட்' விலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாட்களில், அதிக எண்ணிக்கையில் ஆர்டர்கள் கிடைக்கும் எனஎதிர்பார்க்கிறோம். தற்போது, நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. அதனால், 'டி -சர்ட்' விலையையும் சற்று உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE