வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் சீட்டிற்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறோம்' என தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

தி.மு.க., நிர்வாகிகள் 10 ஆண்டுகளாக 'பதவிக் கனவு'வில் உள்ளனர். தற்போது ஒரு வாய்ப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. மாநகராட்சி 100 வார்டுகளில் 25 ஐ கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 75ஐ கைப்பற்ற கணக்கு போட்டுள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்கள், பணப் பலம் உள்ளவர்கள் கவுன்சிலர் 'சீட்' பெற முயற்சித்து வருகின்றனர்.
நகர் வடக்கு, தெற்கு, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என நான்கு மாவட்டங்களில் இரண்டில் கவுன்சிலர் சீட்டுக்கு ஏக 'டிமாண்ட்' இருப்பதால் 'பேரம்' நடக்கிறது.குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்தில் ரூ.25 லட்சம் முதலும், மற்றொரு மாவட்டத்தில் ரூ.30 லட்சம் முதலும் பணப் பலம் உள்ளவர்களிடம் மட்டும் கவுன்சிலர் சீட்டுக்கு வசூல் துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நிர்வாகிகள் கூறியதாவது:மாநிலத்தில் ஆட்சி அமைந்தவுடன் கொரோனா தொற்றுடன் போராடவே காலம் கடந்து விட்டது. கட்சியால் ஒரு 'பயனும்' இல்லாத நேரத்தில் இந்த மாநகராட்சி தேர்தலிலாவது ஒரு பதவியை பெற்றுவிட வேண்டும் என பலர் காய் நகர்த்துகிறோம். ஆனால் பணப் பலம் உள்ளவர்களுக்கு சீட்டு உறுதி என்கின்றனர்.
அவர்களுக்கு சில ஒதுக்கினாலும் கட்சிக்கு உழைத்தவர்களுக்காகவும் சீட்டு ஒதுக்கினால் தான் கட்சி மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.ஆனால் அவ்வாறு நடக்குமா என சந்தேகமாக உள்ளது.
மதுரையில் நடப்பதை பார்த்து சீனியர் நிர்வாகிகளாக இருந்தும் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி தோறும் ஒரு தி.மு.க., எம்.பி.,க்களை உட்கட்சி பார்வையாளராக கட்சி தலைமை நியமித்து தேர்தலை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுபிடித்து வேட்பாளர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE