
எந்த வேலை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் கஷ்டம்தான், ஆனால் கஷ்டமான வேலையைக்கூட இஷ்டப்பட்டு செய்தால் அந்த வேலையில் உயர்வு பெறலாம் என்பதற்கு நானே உதாரணம் என்று கூறியபடி வலம்வரும் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரைக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை பிளஸ் டூ வரை படித்தவர், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது சிரமம் என்பதால் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தார்.
சென்னை சென்ட்ரலில் சவாரிக்காக காத்து நிற்கும் போது ஒரு இளைஞன் அரக்க பரக்க ஒடிவந்தான், வந்தவன் உங்ககிட்ட சார்ஜர் இருக்கா? அவசரமாக போன் சார்ஜ் செய்யணும் என்றான், என்னிடம் அப்படி வசதி இல்லை என்று சொன்னதும் வேறு இடம் தேடி ஓடினான்.

என்ன செலவானாலும் பராவாயில்லை என்று உடனே தனது ஆட்டோவில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்தினார் இதைப்பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் ஏதாவது பேப்பர் வாங்கி போடலாமே என்று சொல்லியிருக்கிறார் உடனே பேப்பர் வாங்கி ஆட்டோவில் வைத்தார் இப்படியே ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப தனது ஆட்டோவில் வசதியை பெருக்கிக் கொண்டே சென்றார்.
இன்றயை தேதிக்கு இவரது ஆட்டோவில் ஒன்பது நாளிதழ்களும்,நிறைய பருவ இதழ்களும்,மினி டி.வி.,யும்,டேப்லட்டும்,குளிந்த குடிநீர் தரும் மினி பிரிட்ஜ்ம்,அனைத்து மொபைல் போன் சார்ஜர்களும்,குழந்தைகளுக்கு பிஸ்கட் சாக்லெட்டும் உள்ளன.
நியாயமான கட்டணமே வாங்குகிறார் ஆட்டோவையும் தன்னையும் எப்போதும் சுத்தமாக பளிச்சென்று வைத்திருக்கிறார் இதன் காரணமாக இவரது ஆட்டோவில் ஒரு முறை ஏறுபவர்கள் தொடர்ந்து இவரது வண்டியிலேயே பயணம் செய்யும் வாடிக்கையாளராக சில நாளில் நண்பராக மாறிவிடுவர்.
இன்னும் இந்த ஆட்டோவில் என்ன மாற்றங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டு ஒரு பாரத்தையும் ஆட்டோவில் வைத்துள்ளார் அதல் பயனுள்ள தகவல் தரும் வாடிக்கையாளருக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கிறார்.
மழை காலத்தில் ஆட்டோவில் நிறைய குடைகள் வைத்திருப்பார் வாடிக்கையாளர் வாகனத்தைவிட்டு இறங்கும் போது குடையை நம்பி கொடுத்துவிடுவார் பிறகு வாங்கிக் கொள்வார் இதுவரை ஒருவர் கூட குடையை திரும்பத்தராமல் ஏமாற்றியது இல்லையாம்.
ஆசிரியர்களுக்கு,கர்ப்பமான பெண்களுக்கு,முன் களப்பணியாளர்களுக்கு ஆட்டோ சவாரி இலவசம் சக ஆட்டோ தொழிலாளர்கள் இவரை கேலி கிண்டல் செய்தாலும் அது பற்றி கவலைப்படாமல் தன் மனது சொல்வதைக் கேட்டு இயங்கியவர் இன்று நாடு முழுவதும் தெரியுமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
இவரது உழைப்பை,உண்மையை,தனித்திறமையை பாராட்டி பல்வேறு சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்து வருகின்றன அதன் உச்சமாக தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு,ஆட்டோ டிரைவர் அண்ணாதுரையை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார் நீங்களும் பாராட்ட வேண்டும் என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:98841 23413.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE