பாட்னா:ரயில்வே தேர்வு முடிவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பீஹாரில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு நடத்திய முழு அடைப்பில் வன்முறை வெடித்தது.
தொழில்நுட்பம் சாராத ரயில்வே பணியாளர் தேர்வை நடத்திய ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம், சமீபத்தில் முடிவுகளை வெளியிட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, பீஹாரில் போராடியோர் மீது வழக்கு பதிவானது. இதையடுத்து ரயில்வே தேர்வு வாரியம், மற்றும் போராடியோர் மீது வழக்கு பதிவு செய்த மாநில அரசை கண்டித்து, நேற்று மாநில அளவிலான முழு அடைப்புக்கு அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
இதற்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியில் உள்ள சில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.எனினும் மாநிலத்தின் சில இடங்களில் மட்டும் முழு அடைப்புக்கு ஆதரவு இருந்தது. பாட்னாவில் உள்ள அசோக் ராஜபாதையில் எரிந்த டயர்களை வீசி, போக்குவரத்தை தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 'பந்த்' ஆதரவாளர்கள், கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE