தூத்துக்குடி: குலுக்கல் முறையில் டூவீலர், 6 பவுன் நகை பரிசு விழுந்ததாக கூறி 46 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெயா. அங்கன்வாடி பணியாளர். 2021 ஜூலை 11ல் இவரது வீட்டுக்கு வந்த மூவர் குக்கர், நான்ஸ்டிக் தவா போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் அதற்கு குலுக்கல் முறையில் பரிசு விழும் என கூறியிருந்தனர். அதனை நம்பி ஜெயா ஐந்து பொருட்களை ரூபாய் 3,800க்கு வாங்கினார். விற்பனை செய்தவர்கள் ஜூலை 24ல் அலைபேசியில் பேசி அவருக்கு குலுக்கலில் ஒரு டூவீலர் மற்றும் 6 பவுன் தங்க நகை பரிசு விழுந்திருப்பதாக கூறினர்.
ஆனால் அவற்றை பெறுவதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என ரூ 35100 கேட்டனர். ஜெயா அந்த பணத்தை அனுப்பினார். ஜூலை 20ல் 6 பவுன் நகையும் டூவீலரும் கேரளா செக்போஸ்ட்டில் சிக்கியிருப்பதாக கூறி மேலும் ரூ 10900 கேட்டனர். அப்போதும் அனுப்பினார். மொத்தமாக 46 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு மூவரும் பேசவில்லை. அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.
இதுகுறித்து ஜெயா தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 25, ஐயப்பன் 29, மாடசாமி 27 ஆகியோரை கைது செய்தனர். இரண்டு டூவீலர்கள் மற்றும் ஒரு அலைபேசியை பறிமுதல் செய்தனர். இவர்கள் தென்மாவட்டங்களில் பலரிடம் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE