பெரிய இடமாய் தேடும் பா.ஜ.,
மாநில தலைமை அலுவலகம் கட்ட, சென்னை மாநகர பகுதிக்குள் பா.ஜ., இடம் தேடி வருகிறது. 2014 ஜூலையில் தேசிய தலைவராக அமித் ஷா பதவியேற்ற பின், டில்லியில் பா.ஜ., தேசிய தலைமை அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் சொந்தமாக இடம் வாங்கவும், அதில் அலுவலகம் கட்டவும், தேசிய, மாநில அளவில் கமிட்டிகளையும் அமித் ஷா அமைத்தார்.
தமிழகத்திற்கான கமிட்டி தலைவராக, மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப் பட்டார். தற்போது, தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இடம் வாங்கப்பட்டு உள்ளது. பாதிக்கும் அதிகமான மாவட்டங்களில், கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகத்தை, தேசிய தலைவர் நட்டா, 2021 நவம்பர் 24ல் திறந்து வைத்தார்.
அப்போது, மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம், சக்கரவர்த்தி ஆகியோருடன், சென்னையில் மாநில தலைமை அலுவலகம் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.சென்னை தி.நகரில் தற்போதுள்ள அலுவலகம், 1998ல் ரங்கராஜன் குமாரமங்கலம், மத்திய அமைச்சராக இருந்தபோது வாங்கப்பட்டது. இது சிறிய இடம் என்பதால், சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.எனவே, பெரிய அலுவலகம் அமைக்க அண்ணாமலை, கேசவவிநாயகம் முயற்சித்து வருகின்றனர். அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை நிலம் தேவை என்றும், விலை மிக அதிகமாக இருப்பதாலும் தாமதமாகி வருகிறது என்கின்றனர்.
அவசர தேர்தலால் அதிர்ந்த கட்சிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திடீரென அறிவித்து, மனு தாக்கல் மற்றும் பிரசாரத்துக்கு குறைந்த காலமே அவகாசம் வழங்கியிருப்பது, அரசியல் கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் சில மாதங்களாக செய்து வந்தாலும், ஒமைக்ரான், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் கெட்ட பெயர் போன்ற காரணங்களால், தேர்தல் தள்ளிப்போகும் என கட்சிகள் கருதின.
ஆனால், நேற்று முன்தினம் அதிரடியாக தேர்தல் தேதியை அறிவித்தது.மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு, பிப்., 4 கடைசி நாள். கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து பேச்சு நடத்த கூட அவகாசம் அளிக்கப்படவில்லை. இதனால், பெரிய கட்சிகளுடன் உடன்பாடு செய்து, குறிப்பிட்ட வார்டுகளை பெற விரும்பிய கட்சிகள் தவிக்கின்றன.
கூட்டணி தலைமை கொடுக்கும் இடங்களை பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளன. வேட்பாளர் இறுதி பட்டியல், பிப்., 7ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று தான் சின்னம் ஒதுக்கப்படுகிறது. அதன் பின் தான், துண்டு பிரசுரங்கள் தயார் செய்து பிரசாரத்தை துவக்க, ஒரு நாள் தேவைப்படும். பிப்., 17 மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடையும். பத்து நாட்களுக்கும் குறைவான நாட்களே பிரசாரத்துக்கு உள்ளன.
கொரோனா காரணமாக, தெருமுனைக் கூட்டங்கள், பேரணி, பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்வதற்கான வாய்ப்பும் இல்லை. வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கவும், அதிருப்தி வேட்பாளர்களை சமாதானப்படுத்தவும் அவகாசம் இல்லாத நிலை. இதனால், பெரிய, சிறிய கட்சிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement