பெங்களூரு : அமைச்சர்களை, 'டீம் கர்நாடகா' என்று கூறிய முதல்வர் பசவராஜ் பொம்மை, வலுவான மாநிலத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் எங்கள் அணி ஈடுபட்டு வருவதாகவும் பெருமிதம் கொண்டார்.
கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை, 2021 ஜூலை 28 ல் பதவியேற்றார். அவர் ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுபெற்றது. மேலும் நேற்று அவருக்கு 62வது பிறந்த நாள்.இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த அவர், தன் ஆறு மாத ஆட்சியின் சாதனைகள் அடங்கிய 'மகத்தான எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் படிகள்' என்ற தலைப்பிலான புத்தகத்தை பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கடவுள் ஆசிர்வாதம் இருக்கும் மாநிலம், கர்நாடகா. இயற்கை வளமிக்க மாநிலம். கர்நாடகாவில் உற்பத்தியாகும் ஆறுகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன. ஆண்டின் 365 நாட்களும் தோட்டக்கலை பயிர் விளையும் பூமி இது. இந்த பெருமை வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லை.கனிம, வன வளம் எங்களிடம் ஏராளமான கனிம வளம், வன வளம் உள்ளது. கங்கர்கள், சோழர்கள் மற்றும் மைசூரு ஆட்சியாளர்களான விஜயநகர மன்னர்கள் நமக்கு மகத்தான கலாச்சாரத்தை விட்டுச் சென்றனர்.
நமது மாநிலத்தின் ஜாம்பவான்களான ராயண்ணா, சென்னம்மா, அப்பாக்கா உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.சுதந்திரத்திற்குப் பின்னும் பாரம்பரியம் மிக்க ஆட்சி கர்நாடகாவில் உள்ளது. கர்நாடகாவுக்கு அனைவரும் கொடுத்த கலாச்சாரம் எனக்கு நினைவிருக்கிறது. மாநில நலன்களை பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் சளைத்தோர் இல்லை.
விவசாயத்தில் முன்னோக்கி இருக்கிறோம். தொழில் துறையும் மாநிலத்தில் முன்னணியில் உள்ளது. ஆராய்ச்சித் துறையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம்.அரசை உருவாக்குவதன் மூலம் அதன் வளங்களை ஒருங்கிணைப்பதே, அரசின் வெற்றியாகும். ஐந்து முதல்வர்களுடன் நிர்வாகத்தை உன்னிப்பாக கவனித்தவன் நான்.
இருப்பினும், சுகாதார சீர்கேடும், வெள்ளம் ஒரே நேரத்தில் வந்தது. ஒரு புறம் மக்களின் உயிரை காப்பாற்றவும், மற்றொரு புறம் வாழ்வாதாரத்தை உருவாக்கவும் செய்தோம்.விழிப்புணர்வு அரசுகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சவாலை நாம் பார்த்தோம். விவசாயிகள், இளைஞர்கள், என அனைத்து வகுப்பினருக்கும் திட்டம் வகுத்தோம். இருப்பினும், பொருளாதார நிலை எங்களுக்கு ஒரு பிரச்னையாக உள்ளது.
எங்களுடையது விழிப்புணர்வு அரசு.எத்தகைய கஷ்டம் ஏற்பட்டாலும் மக்களுக்கு துணையாக நிற்போம். மனித நேயத்தை விட்டுக் கொடுக்கவில்லை. வெள்ளத்தின் போது மத்திய அரசின் விதிமுறைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக நிவாரண நிதி வழங்கப்பட்டது.அரசுக்கு எவ்வளவு சுமை ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு கஷ்டம் கொடுக்கவில்லை. இதன் மூலம், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி, விதவை, முதியோர் ஓய்வூதிய தொகை உயர்த்தியுள்ளோம். இதன் மூலம், 58 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.விவசாயிகளின் பயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நாங்கள் செய்துள்ளோம். அவர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு நிதியுதவி செய்துள்ளோம். தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக புது திட்டம் வகுத்துள்ளோம்.
முழுமையான வளர்ச்சி:
அனைத்து திட்ட பணமும் ஆன்லைனில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு தலா 1 லட்சம் ரூபாயும்; மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி வருகிறோம்.முழுமையான வளர்ச்சியே எங்கள் அரசின் விருப்பம். மக்களை பங்காளிகளாக்குவதுதான் இதன் நோக்கம். மாநிலத்தை கட்டியெழுப்ப அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்கள் குறிக்கோள். கொரோனா ஊரடங்கிலும், 24 ஆயிரம் கோடி ரூபாய் அபிவிருத்தி பணிகள் செய்துள்ளோம்.
மாநிலத்தின் 7,500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்பு கொள்கையை அமல்படுத்தியுள்ளோம்.ஒருங்கிணைந்த வேளாண்மைக்கான இயக்குனரகத்தை அமைத்துள்ளோம்.பால் மற்றும் தோட்டக்கலை உட்பட பல வகுப்புகளுக்கு நாங்கள் வசதி செய்துள்ளோம். உழைக்கும் வர்க்கத்தினால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம். சிலர் பணமே 'பெரியப்பா' என்று நம்புகின்றனர்.
எங்களுக்கு உழைப்பு தான், 'பெரியப்பா'அமைச்சர்கள் தான், 'டீம் கர்நாடகா.' நானும் அந்த அணியில் உள்ளவன். வலுவான கர்நாடகத்தை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் எங்கள் அணி ஈடுபட்டு வருகிறது. 24 மணி நேரமும் பணியாற்றி கர்நாடகத்தை அனைத்து துறைகளிலும் உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.
தனது பிறந்த நாளை ஒட்டி, 11 பசுக்களை பசவராஜ் பொம்மை நேற்று தத்தெடுத்தார். அவற்றை, தன் வீட்டில் வளர்க்க உள்ளார்.மோடி, அமித் ஷா வாழ்த்துதன் பிறந்த நாளை ஒட்டி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் டுவிட்டர் மூலம் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து அமைச்சர்களும் நேரில் வந்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE