சென்னை:சென்னை, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படுவதாக, மத்திய அமைச்சரிடம், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை, மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து, அனைத்து மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், நேற்று நடந்தது.காணொலி வாயிலாகநடந்த கூட்டத்தில், சென்னை தலைமைசெயலகத்தில் இருந்தபடி, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 2.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். தினசரி பாதிப்பு, 28 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில், 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் பேர் மருத்துவமனை களிலும் உள்ளனர்.சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகின்றன.
மாநிலத்தில் உள்ள, 1.33 லட்சம் சாதாரண படுக்கைகளில், 8 சதவீதம் பேர் மட்டுமே உள்நோயாளிகளாக உள்ளனர். மேலும், 42 ஆயிரத்து 660 ஆக்சிஜன் படுக்கைகளில், 10 சதவீதம் பேரும்; 10 ஆயிரத்து 147 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில், 11 சதவீதம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.மாநிலத்தில், 5.78 கோடி பேர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களில், 89.83 சதவீதம் பேர் முதல் தவணையும், 67.30 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
மேலும், 15 முதல் 18 வயது வரை உடைய, 33.46 லட்சம் பேரில், 25 லட்சத்து 87 ஆயிரத்து 878 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், 3 லட்சத்து 31 ஆயிரத்து 187 பேருக்கு 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE