சென்னை:பெற்றோரின் ஆசைக்காக, மருத்துவம் படிக்க, 'நீட்' தேர்வு எழுதி, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பட்டியலில், 61 வயது ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் இடம் பிடித்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 61. விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இண்டூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, 2020ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
வாய்ப்பை கைவிட்டார்
அதன்பின், வீட்டில் இருந்த சிவபிரகாசம், பிளஸ் 2 படிக்கும் மகள் ஜனவர்த்தினிக்கு பாடம் கற்றுக் கொடுத்து வந்தார்.தொடர்ந்து படிப்பின் மீது ஆர்வம் ஏற்படவே, தன்னை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற, தன் பெற்றோரின் சிறுவயது ஆசையை, மனைவி சுப்புலட்சுமியிடம் கூறியுள்ளார். மனைவியும், கணவரின் ஆசைக்கு உந்துகோலாக இருந்ததை தொடர்ந்து, சிவபிரகாசம் 'நீட்' தேர்வு எழுதினார்.
அதில், 249 மதிப்பெண் பெற்ற அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 349வது இடம் பெற்றார்.இதைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்ற சிவபிரகாசம், மருத்துவ படிப்பை மாணவர்களுக்கு விட்டு கொடுப்பதாக கூறி, தனக்கு கிடைத்த மருத்துவ வாய்ப்பை கைவிட்டார்.
விழிப்புணர்வு
இது குறித்து சிவபிரகாசம் கூறியதாவது:பாப்பாரப்பட்டி, தியாகி சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலை பள்ளியில் படித்தேன். பட்டப் படிப்புகளை முடித்த பின், மின் வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றினேன். தொடர்ந்து, 13 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
நான் பள்ளியில் படிக்கும்போது, என் பெற்றோர், மருத்துவம் படிக்கும்படி கூறினர். அப்போது, பிளஸ் 2 பாடத்தில், 554 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அதனால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது, நீட் தேர்வுக்குப் பின், அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும், போட்டி தேர்வுகளைக் கண்டு, மாணவர்கள் பயப்படக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்வு எழுதினேன்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற பின், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்கும் என்பது உறுதியானது. என் பெற்றோர், சிறுவயது ஆசையை நிறைவேற்றி கொள்ள, 'இப்போது மருத்துவம் படி' என்கின்றனர். ஆனால், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., பயிற்சி டாக்டராக இருக்கும் என் மகன் பிரசாந்த், என் இடத்தை மற்றொரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுக் கொடுக்கும்படி சொல்கிறார்.
நான் படித்தால், 66 வயதில் மருத்துவம் முடித்து, அடுத்த 15 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்வேன். மாணவர்கள் படித்தால், 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை செய்ய முடியும். எனவே, மகனின் கோரிக்கைக்கு ஏற்ப, மருத்துவ படிப்பை விட்டு கொடுத்துள்ளேன். நான் படிக்க வேண்டும் என்றபோது, வழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த மனைவி சுப்புலட்சுமிக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
நிராகரிப்பு
இதற்கிடையே, 1978ம் ஆண்டுகளில், தமிழகத்தில் பிளஸ் 2 பாடத்திட்டத்திற்கு பதிலாக, பி.யூ.சி., என்ற படிப்பு மட்டுமே இருந்தது. தற்போது மருத்துவ படிப்புக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அடிப்படை தகுதிகளாக இருப்பதால், பி.யூ.சி., படிப்பை ஏற்க முடியாது என, அவரது விண்ணப்பத்தை, மருத்துவ கல்வி இயக்ககம் நிராகரித்துள்ளது. அதற்கு முன்பே, கவுன்சிலிங்கில் பங்கேற்காமல்சிவபிரகாசம் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE