நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி பேரத்தில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அறிவாலயத்தில் நேற்று நடந்த பேச்சுக்கு பின், தி.மு.க.,விடம் கேட்டது கிடைக்கும் என, தமிழக காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சை துவங்கிய, அ.தி.மு.க., தலைமை, இன்று பா.ஜ.,வுடன் பேச தீவிரம் காட்டுகிறது. ஆனால், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், தமிழக பா.ஜ., தரப்பில், அக்கட்சி தலைவர் அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. பிப்., 4ல் மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. எனவே, உடனடியாக கூட்டணி பேச்சை முடித்து, வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நெருக்கடி, அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், நேற்றே கூட்டணி பேரத்தை, கட்சிகள் துவக்கி விட்டன.
தற்போதைய நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில், அவற்றை ஆதரிக்கும் கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் அளிக்கும் பட்டியல் அடிப்படையில், வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பது; கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அந்தந்த மாவட்டங்களில், அவர்களுக்கு செல்வாக்குள்ள இடங்களை மட்டும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டதாக, தகவல் வெளியானது. மாலை, 5:30 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு 7:20 மணிக்கு நிறைவடைந்தது.
சமூக சமத்துவப் படை கட்சி தலைவரான, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, நேற்று அ.தி.மு.க., கூட்டணி பேச்சில் பங்கேற்றார். அவர் கூறுகையில், ''அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். காஞ்சிபுரம் நகராட்சி, உத்திரமேரூர் பேரூராட்சி, தாம்பரம், ஆவடி, சென்னை மாநகராட்சிகளில், 12 வார்டுகளை கேட்டுள்ளோம்,'' என்றார்.
அதேபோல், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியும், தங்களுக்கு தேவையான வார்டுகளை வழங்க கோரிக்கை வைத்தார். த.மா.கா., சார்பில் விருப்ப பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் அ.தி.மு.க.,வுக்கு அடுத்த பெரிய கட்சியான பா.ஜ., உடன், இன்று பேச்சு நடக்க வாய்ப்புள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அண்ணாமலைக்கே அதிகாரம்
இதற்கிடையில், அ.தி.மு.க., உடனான கூட்டணி குறித்து முடிவு எடுக்க, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர், மாவட்ட தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: சென்னை உட்பட, நான்கு மாநகராட்சிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. ஏற்கனவே பா.ஜ., தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தயாராக இருந்த நிலையில் நாளை, நாளை மறுநாளுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிவிப்பார். அந்த அறிவிப்புக்கு பின், எல்லா மட்டங்களிலும் வேட்புமனு தாக்கல், 31ம் தேதிக்கு பின் துவங்கும்.
அ.தி.மு.க., உடனான கூட்டணி குறித்து முடிவு எடுக்க, அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து எந்த முடிவாக இருந்தாலும், அதை எடுக்கும் முழு அதிகாரத்தை, அண்ணாமலை பெற்றுள்ளார். அ.தி.மு.க., உடன் கூட்டணி சுமுகம், சுமுகம் இல்லை என்று, எந்த கருத்தும் நான் சொல்லவில்லை.எல்லா விஷயத்திற்கும் பா.ஜ., தயாராக இருக்கிறது. வேட்பாளர்கள் தேர்வு, நாளை மறுதினத்திற்குள் முடிந்து விடும். அதற்குள்ளாக, அண்ணாமலை கூட்டணி சம்பந்தமாக தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., கேட்டது கிடைக்குமா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பாக, தி.மு.க., - காங்., இடையே நடந்த முதல்கட்ட பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளன.
சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர், கூட்டணிக் கட்சிகளுக்கு இடப்பங்கீடு தொடர்பான பேச்சு நடத்தினர். தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்தனர். முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனை சந்தித்து பேசினர். முதல் கட்ட பேச்சில், காங்கிரஸ் எதிர்பார்த்த சதவீதம் கணக்கிற்கு, தி.மு.க., உடன்படவில்லை.
அதாவது, காங்கிரசுக்கும் எத்தனை சதவீதம் இடம் வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும்படி காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தி.மு.க., தரப்பில், 'மாவட்ட அளவில் கூடுதலாகவும், குறைவாகவும் ஒதுக்க வேண்டி வரும். எனவே, காங்கிரஸ் கட்சிக்குரிய பங்கீடு வழங்கப்படும். அந்தந்த மாவட்ட செயலர்களிடம் பேச்சு நடத்திக் கொள்ளுங்கள். ஏதும் பிரச்னை என்றால் எங்களிடம் சொல்லுங்கள்' என, கூறப்பட்டுள்ளது. இதையத்து, அறிவாலயத்தில் வழங்கப்பட்ட சூடான காபியை இவரும் குடித்து விட்டு, சூடாக கிளம்பி வந்து விட்டனர்.
நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது: காங்கிரசில் பேச்சு நடத்த, மாவட்ட அளவில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், தி.மு.க., மாவட்ட செயலர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கேட்கும் இடங்களை பெறுவோம். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும். பல மாவட்டங்களில், பேச்சு சுமுகமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் கேட்ட இடங்களை பரிசீலிப்பதாக, தி.மு.க., உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
3 மேயர் பதவிகள் கேட்கிறது காங்.,
மொத்தமுள்ள மாநகராட்சிகளில், 20 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், மூன்று மேயர் பதவிகளை, காங்கிரஸ் கேட்கிறது. அதன்படி, ஆவடி, கரூர், கோவை, சிவகாசி, நாகர்கோவில் ஆகியவற்றில் இருந்து, மூன்று மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என, காங்கிரஸ் தரப்பில் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரசுக்கு 5 சதவீதம் பங்கீடு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. எனவே, வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிந்த பின், மேயர் பதவி ஒதுக்கீடு பற்றி பேசலாம் என கூறிவிட்டு, 5 சதவீதம் அடிப்படையில், ஒரு மாநகராட்சியை மட்டும், தி.மு.க., தரப்பில் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு 4.6 சதவீதம் இடங்கள் தான் வழங்கப்பட்டன. அதேபோல் இப்போதும் முடிவெடுத்தால், ஒரு மாநராட்சி மேயர் பதவி கூட, காங்கிரசுக்கு கிடைக்காது.
அ.தி.மு.க., கூட்டணி : பா.ஜ., தலைவர்கள் விருப்பம்
அ.தி.மு.க., கூட்டணியை தொடர வேண்டும் என்று, தமிழக பா.ஜ., தலைமையிடம், பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்த, பா.ஜ., மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடரலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும், மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜ.,வின் 60 மாவட்டங்களில், ஈரோடு வடக்கு, நாகை வடக்கு தவிர, 58 மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட தலைவரிடமும் தனித்தனியாக அண்ணாமலை கருத்து கேட்டார். 'பா.ஜ., தனித்து போட்டியிட்டால் ஓட்டு சதவீதத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க.,வுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும். அதிக இடங்களில் வெற்றி கிடைக்காது. இதனால், ஓட்டுக்கள் பிரிந்து, தி.மு.க., வெற்றி பெற சாதகமாகி விடும். இதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்றால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும்' என, பலரும் வலியுறுத்தினர்.
'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால், 2024 லோக்சபா தேர்தலுக்கு மீண்டும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, கூட்டணி அமைத்து, 30 சதவீத இடங்களை கேட்டு பெற வேண்டும்' என, பலரும் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் குறைந்தது, 30 சதவீத இடங்கள் வரை பெற வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட அண்ணாமலை, டில்லி மேலிட தலைவர்களிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE