அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில், திருவொற்றியூர் மண்டலத்தில், ஆளும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, கடந்த சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் 48 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் முக்கிய போட்டியாளராக இருப்பார் என்பதால், இங்கு மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பாக கே.பி. சங்கர், அ.தி.மு.க.,வில் குப்பன், நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். முன்னதாக, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கோகுல், 3,961 ஓட்டுகள் பெற்றார். கடந்த ௨௦௨௧ல் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானே நேரடியாக போட்டியிட்டதால், 48 ஆயிரத்து 497 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடம் பிடித்ததோடு, 'டிபாசிட்' தொகையை தக்க வைத்து, பிரதான கட்சிகளை மலைக்க செய்தார்.திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய 18 வார்டுகளில், 10 வார்டுகளில் தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக, நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தது.இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகள், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை சீமான் பெற்ற ஓட்டுகளை அப்படியே தக்க வைத்தாக வேண்டும் என்ற முனைப்பில், நாம் தமிழர் கட்சியினர், திருவொற்றியூர் மண்டலத்தில் களம் இறங்கியுள்ளனர். ஆளும் தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் என்பதால், திருவொற்றியூர் மண்டலத்தில் இம்முறை, மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE