சென்னை :'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்குக்கு வந்த 64 வயது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு 'சீட்' மறுக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி. நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்றார். அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தார்.எம்.எஸ்சி. தாவரவியல் எம்.எட். முடித்த இவர் மருத்துவ படிப்பில் சேர கல்வி தகுதி பெற்றவர் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையின் சார்பில் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்ததற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் உறுதியளிப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தர வரிசையில் முன்னிலை
இந்த சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தார். ஆனால் மருத்துவ தர வரிசை பட்டியல் வெளியானபோது முனுசாமி பெயர் இல்லை. பின் முனுசாமி மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகளை சந்தித்து சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.
இதையடுத்து தர வரிசை திருத்த பட்டியல் வெளியானது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் இடம் பெற்றார். நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங் நடக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார்.
இடம் மறுப்பு
மருத்துவ கல்வி அதிகாரிகள் அவர் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என கூறினர். அவர் பி.யூ.சி. படிப்பைஅரசு உதவி பெறும் விவேகானந்தா கல்லூரியிலும் படித்ததால் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.முனுசாமி கூறுகையில் ''அரசாணைப்படி எனக்கு ஒதுக்கீடு கிடைக்க சட்ட ரீதியாக முயற்சிப்பேன்''என்றார்.
விட்டுக் கொடுத்த ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம் 61. விலங்கியல் முதுகலை பட்டம் பெற்ற இவர் 2020ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.தனது பெற்றோர் கனவை நனவாக்கசிவபிரகாசம் 'நீட்' தேர்வு எழுதினார்.அதில் 249 மதிப்பெண் பெற்ற அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில் 349வது இடம்பெற்றார்.நேற்று துவங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்ற சிவபிரகாசம் மருத்துவ படிப்பை மாணவர்களுக்கு விட்டு கொடுப்பதாக கூறி தனக்கு கிடைத்த மருத்துவ வாய்ப்பை கைவிட்டார்.
விழிப்புணர்வு
சிவபிரகாசம் கூறியதாவது:போட்டி தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்வு எழுதினேன். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருக்கும் என் மகன் பிரசாந்த் கூறியதால்என் இடத்தை மற்றொரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுக் கொடுத்தேன். எனக்குவழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த மனைவி சுப்புலட்சுமிக்கு நன்றி என்றார்.இவ்வாறு அவர்
கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE