மரக்காணம் : மரக்காணம் அடுத்த கூனிமேடு கழுவெளியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுக்கும் பணி மழையால் தடைபட்டது.மரக்காணத்தை கடந்த டிசம்பர் 6ம் தேதி 16வது பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்தது.
மரக்காணம் அடுத்த கூனிமேடு, வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள கழுவெளியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்கள் நடைபெறும்.இந்த ஆண்டு நேற்று 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று கூனிமேடு கழுவெளியில் மும்பை இயற்கை வரலாற்று பவுண்டேஷன், உலகளாவிய சுற்றுச்சூழல் பவுண்டேஷன், ஐ.பி.எப்., மற்றும் மாவட்ட வனத்துறை ஆகியோர் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொங்கினர்.
மாவட்ட வன அலுவலர் சுமேஷ், மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து, வன விரிவாக்க அலுவலர் உமா சங்கர் மயிலாடுதுறை, திருச்சி கல்லுாரி மாணவர்கள் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் பறவை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மழை பெய்ததால், கணக்கெடுக்கும் பணி தடைபட்டது. அதனால் இன்று மீண்டும் கணக்கெடுக்கும் பணியை தொடர உள்ளனர்.பி.என்.எச்.எஸ்., நிறுவன அறிவியலாளர் பாலச்சந்தர் கடந்த 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில் 17,565 பறவைகள் 47 இன வகைகள் இருந்ததாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.