வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : இறக்குமதி செய்த சொகுசு காருக்கு, அபராதம் விதித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை முடியும் வரை, கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு: என் சொந்த உபயோகத்துக்காக, அமெரிக்காவில் இருந்து பி.எம்.டபிள்யூ., காரை, 2005 செப்டம்பரில் இறக்குமதி செய்தேன். வாகனத்தை பதிவு செய்ய, மண்டல போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, நுழைவு வரி செலுத்தும்படி கூறினர். உயர் நீதிமன்றத்தை அணுகினேன். காரை பதிவு செய்ய, உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவிட்டது.
கடந்த 2009ம் ஆண்டில், இந்த காரை ஒருவருக்கு விற்று விட்டேன். 2019 ஜூனில், என் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நுழைவு வரி 7.98 லட்சம் ரூபாய் மற்றும் அபராதம் 30.23 லட்சம் ரூபாய் நிர்ணயித்து, அதை செலுத்தும்படி, வணிக வரித் துறை உதவி கமிஷனர் உத்தரவிட்டார். கடந்த 2021 டிசம்பரில் அனுப்பிய நோட்டீசில், 'நுழைவு வரி செலுத்தவில்லை என்றால், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிப்பு செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், வரி செலுத்தும்படி உத்தரவிடவில்லை. 2009ம் ஆண்டு முதல், வாகனம் என் வசம் இல்லை. நுழைவு வரி 7.98 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டேன். அபராதம் விதிப்பது நியாயமற்றது. வணிக வரித் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சி.சரவணன் முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, பிப்., 1ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். விசாரணை முடியும் வரை, அபராதத்தை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE