தஞ்சாவூர்: 'மாணவி மரணத்திற்கும் மத மாற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் அருகே மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கடந்த 19ம் தேதி இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். நேற்று காலை தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மைக்கேல்பட்டி கிராமத்தினர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
மனுவில் 'எங்கள் குழந்தைகளும் துாய இருதய பள்ளியில் தான் படித்து வருகின்றனர். நல்ல ஒழுக்கத்தையும் கல்வியும் கொடுத்து வந்த இப்பள்ளி மீதும் எங்கள் ஊரின் மீதும் மாணவி மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும் அமைப்புகளும் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. 'இதை வன்மையாக கண்டிக்கிறோம். பல தரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும் விசாரிப்பதையும் தடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின் கிராம மக்கள் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இங்கு இதுவரை மதமாற்றம் நடக்கவில்லை. இறந்த மாணவியை வைத்து பிரச்னை செய்ய வேண்டும் என சிலர் ஆசைப்படுகின்றனர். மாணவி மரணத்திற்கும் மத மாற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அந்த பள்ளியில் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.