புதுடில்லி: ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களை கடந்திருந்தால் அவர் ஸ்டேட் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட மாட்டார். அதேபோல் , பதவி உயர்விலும் பரிசீலனை செய்யப்பட மாட்டார் என ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அந்த வங்கிக்கு டில்லி பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை ஸ்டேட் வங்கி திரும்ப பெற்று கொண்டது. பொது மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிகளை வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் டிச.,31 அன்று வெளியிட்ட புதிய விதிமுறைகளில், ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களை கடந்திருந்தால் அவர் ஸ்டேட் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட மாட்டார். அதேபோல், கர்ப்பகாலம் 3 மாதங்களை கடந்திருந்தால் பதவி உயர்விலும் பரிசீலனை செய்யப்பட மாட்டார். அவர்கள், தற்காலிகமாக தகுதியவற்றவர்களாக கருதப்படுவார்கள். பணியில் சேர அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தால், பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்கு பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராக கருதப்படுவார் என தெரிவித்திருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏராளமான எம்.பி.,க்கள் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டேட் பாங்க்கிற்கு டில்லி பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில், இந்த விதிமுறைகளை வகுத்ததற்கான நடைமுறைகள் என்ன? இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? அவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கமிஷனின் தலைவர் ஸ்வாதி மாலிவல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை பாரபட்சமானது. சட்டவிரோதமானது. பெண்களுக்கு எதிரான விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அந்த அந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE