நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு மத்திய அரசு நிர்ணயித்த இலக்கில், தற்போதைய நிலவரப்படி, 5 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இழப்பை சந்தித்து வரும் பொதுத் துறை நிறுவனங்களை விற்பதிலும், லாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது.
10 சதவீத பங்கு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2021 - 22ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில், 'லாபமற்ற பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்; இழப்பில் உள்ள நிறுவனங்கள் விற்கப்படும்; முக்கிய துறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு குறைக்கப்படும்' என்றார்.
இதன்படி 'ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., பேங்க், பாரத் எர்த் மூவர்ஸ், பவன் ஹன்ஸ், நீலாசல் இஸ்பட் நிகம்' ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இவை தவிர்த்து, இரு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம், எல்.ஐ.சி.,யின் 10 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். அவர் தெரிவித்ததில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மட்டுமே முழுமையாக முடிவடைந்துள்ளது.
நடப்பு 2021 - 22ம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக, 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதில் தற்போதைய நிலவரப்படி, 5 சதவீதம், அதாவது 9,329 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. பங்கு விற்பனை இலக்கை எட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
நத்தை வேகம்
இதற்கு, 2020 துவக்கத்தில் இந்தியாவில் பரவத் துவங்கி, தற்போது 'ஒமைக்ரான்' வடிவில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை உருவெடுத்திருப்பதை முக்கிய காரணமாக கூறலாம். இது தவிர, மத்திய அரசிற்கு தொடர்பில்லாத சர்வதேச நிலவரங்களும், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை திட்டத்தை நத்தை வேகத்தில் நகர்த்த வைத்திருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை பணிகள், நீண்ட காலம் நடக்கக் கூடியவை. பல அம்சங்களின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பிடவே பல காலம் ஆகும். சரியான மதிப்பில், உரிய காலத்தில் பங்கு வெளியீட்டை மேற்கொள்வதும் முக்கியமாகும்.
ஆர்வம் குறைவு
பிரதமர் வாஜ்பாய் காலத்தில் காணப்பட்டதை விட, தற்போது பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் அரசியல் ரீதியிலான ஆர்வம் குறைவாக உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்வக் குறைவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும் காணப்படுகிறது. பொதுத் துறை நிறுவனப் பங்குகளை குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தால், அது தொடர்பாக ஓய்வு பெற்ற பின், ஏதாவது வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்ச உணர்வு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் உள்ளது. இதுவும், பங்கு விற்பனை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஒரு காரணம் என்கின்றனர்.
இவை தவிர, அமைச்சக வட்டாரங்களிலும் பங்கு விற்பனையில் முழு ஈடுபாடு இல்லை. சில அமைச்சகங்கள் அவற்றின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மீதான ஆளுமை குறைவதை விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.வங்கிகள் போல, ஒரே துறையைச் சேர்ந்த இரு பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றிணைத்து பங்குகளை விற்கலாம். எனினும், வங்கிகள் போலன்றி, பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிலம் போன்ற அசையா சொத்துக்கள் ஏராளமாக உள்ளதால், இவ்வகை திட்டத்தை செயல்பாட்டிற்கு எடுத்து வருவதிலும் சிரமம் உள்ளது.
தள்ளுபடி
சில சமயம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடர்பாக வழக்குகள் தொடரப் படுகின்றன. உதாரணமாக, ஏர் இந்தியா விற்பனையை எதிர்த்து பா.ஜ., தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்ததை குறிப்பிடலாம். ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், ஏர் இந்தியா விற்பனை நடந்து முடிந்துள்ளது.இது போன்ற வழக்குகளும் பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையை தாமதப்படுத்தி, அரசின் இலக்கை எட்ட தடைக் கற்களாக அமைந்து விடுகின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE