சென்னை:எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தில், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளாமல் தமிழக அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், இச்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கனரக வாகனங்கள் உள்ளிட்டவை செல்லும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு வாயிலாகவும், சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.மாநில தேசிய நெடுஞ்சாலை பிரிவின் சாலை உருவாக்கம், விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நிதி வழங்கி வருகிறது.
கனரக வாகனங்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளை மேம்படுத்துவது நடைமுறை. இதன்படி தமிழகத்தில், பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியால் ஒப்படைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இது தவிர, இச்செய்தியில் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள, 500 கி.மீ., நீளம் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த, மாநில அரசு, கொள்கை அளவில் முடிவு செய்தது.இது தொடர்பான விபரங்கள், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த 500 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்; மத்திய அரசிதழிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், எட்டு மாதங்களாக அடுத்த கட்ட பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகளை தொடர்ச்சியாக அணுகினால் மட்டுமே, இது போன்ற பணிகளில் வெற்றி கிடைக்கும்.மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மெத்தனத்தால், எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டம், கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE