சென்னை:கட்டுமான திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்குவதற்கான புதிய திட்டத்தை, தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
தமிழகத்தில் நகரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்ட அனுமதி வழங்க, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன.இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் கட்டட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து, கட்டட அனுமதி பணிகளை மறு சீரமைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான புதிய திட்டத்தை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., உருவாக்கி வருகிறது.இதற்காக, கட்டுமான துறையின் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் புதிய திட்டம் குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விளக்கினர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய திட்டத்தின் படி, கட்டுமான திட்ட அனுமதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. 'இன்ஸ்டன்ட், ஆட்டோ, ரெகுலர்' ஆகிய மூன்று தலைப்புகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட உள்ளன.இதில், 1,000 சதுர அடி வரையிலான நிலத்தில், தரை தளம், முதல் தளம் வரையிலான இரண்டு வீடுகள் அடங்கிய குடியிருப்பு கட்ட, 'இன்ஸ்டன்ட்' முறையில் உடனடியாக ஒப்புதல் வழங்கப்படும்.
பொது மக்கள், 2016 அக்., 20க்கு பின் பதிவான விற்பனை பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, கட்டட வரைபடம், ஆதார் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால், 24 மணி நேரத்தில் ஒப்புதல் கிடைத்து விடும்.ஆவணங்கள் ஆய்வுக்கு அதிகபட்சமாக, 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்கு அடுத்தபடியாக, 32 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, 'ஆட்டோ' முறையில் ஒப்புதல் வழங்கப்படும். ஆவண ஆய்வுக்கு, 30 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு, 'ரெகுலர்'என்ற வழக்கமான முறையில் ஒப்புதல் வழங்கப் படும். இது, அனைத்து பணிகளும், 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE