தி.மு.க., ஆட்சிக்கு வந்த எட்டே மாதங்களில், 84 அலுவலர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால், பதிவுத்துறை பரபரப்பாகி உள்ளது.
தமிழகத்தில், 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. இவற்றில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்ற பெரும் போட்டி நடப்பது வழக்கம்.பத்தாண்டுகளில் பதிவுத்துறையில் லஞ்சமும், முறைகேடும் மிகவும் அதிகரித்துள்ளது.
பதிவுத்துறையில் நடந்து வரும் முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் படும் என, துறை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, விசாரணை அடிப்படையில் பதிவுத்துறை அலுவலர்கள் பலரும்சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,ஆட்சியில் நடந்த பதிவு முறைகேடுகள் மட்டுமின்றி, இப்போது வந்துள்ள புகார்களிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல அலுவலகங்களுக்கு துறை அமைச்சரே நேரடியாக சென்று, மக்களிடமே விசாரணை நடத்தி பல அலுவலர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.ஆனால், நல்ல வருவாய் உள்ள இடங்களுக்கு பணி மாறுதல் வாங்குவதற்காக, அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவதும், கோடி ரூபாய் வரை பேரம் பேசி பணி மாறுதல் வாங்குவதும், இப்போதும் மாறவே இல்லை. முதல்வர், அமைச்சர், ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டியவர்கள் என்ற பெயரில், முறைகேடாக பதிவு செய்யுமாறு பதிவுத்துறை அலுவலர்களை மிரட்டுவதும், நிர்ப்பந்திப்பதும் வழக்கம் போல தொடர்கிறது.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற எட்டு மாதங்களில், பதிவுத்துறையைச் சேர்ந்த 84 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில், 22 பேர் மட்டுமே அ.தி.மு.க., ஆட்சியில் முறைகேடு செய்ததாக நடவடிக்கைக்கு உள்ளானவர்கள். மற்றவர்கள் இப்போது வந்த புகார் மற்றும் முறைகேடுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவுத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:பதிவுத்துறை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை மாவட்ட பதிவாளர்கள், சார் -பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இதே துறையில், கோடிகளில் சம்பாதித்த பல அலுவலர்கள், இப்போதும் பசையான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வரையிலும், துறையில் முறைகேடுகளைத் தடுக்கவே முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE