சென்னை:தஞ்சை, கரூர், திருவண்ணாமலை ஆகிய புதிய மண்டலங்கள் ஏற்படுத்துவதற்கான ஆணையை, மின் வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், சென்னை தெற்கு மண்டலம், திருவள்ளூர் மண்டலமாக பெயர் மாற்றம் செய்து உள்ளது.
தமிழக மின் வாரியம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலுார், விழுப்புரம் ஆகிய ஒன்பது மண்டலங்களாக செயல்படுகிறது. கூடுதலாக தஞ்சை, திருவண்ணாமலை, கரூர் ஆகிய, மூன்று புதிய மண்டலங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து நம் நாளிதழிலும் இம்மாதம் 21ல் செய்தி வெளியானது.
இந்நிலையில், மேற்கண்ட புதிய மண்டலங்களுக்கான அதிகாரப்பூர்வ ஆணையை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கரூர், பல்லடம், நாமக்கல் ஆகிய, மின் பகிர்மான வட்டங்கள் கரூர் மண்டலத்திலும்; தஞ்சை, திருவாரூர், நாகை வட்டங்கள் தஞ்சையிலும்; திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகியவை, திருவண்ணாமலை மண்டலத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், சென்னை வடக்கு, சென்னை தெற்கு மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.சென்னை தெற்கு மண்டலத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கிண்டி, கே.கே.நகர், போரூர் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை தெற்கு ௧; அடையாறு, ஐ.டி., காரிடார், தாம்பரத்தை உள்ளடக்கிய சென்னை தெற்கு 2 ஆகிய வட்டங்கள் செயல்படுகின்றன.
தற்போது, சென்னை தெற்கு மண்டலம், திருவள்ளூர் மண்டலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வட்டங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சென்னை தெற்கு மண்டல அலுவலகத்தின் தலைமையகம், திருவள்ளூருக்கு மாற்றப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE