சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான விலை 1,000 ரூபாய் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுவதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குவாரிகளை இயக்கி, 'ஆன்லைன்' முறையில் மணல் விற்க, தமிழக அரசு புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது. புதிய விதிகளின்படி, 16 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப் பட்டு, லாரிகளுக்கு ஒரு யூனிட் ஆற்று மணல் 1,000 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்தொகையை மக்கள் ஆன்லைன் முறையில் செலுத்தி, அதற்கான லாரி விபரங்களை அளித்தால், குறிப்பிட்ட நேரத்தில் மணல் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், சந்தை நிலவரப்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், ஒரு யூனிட் ஆற்று மணல் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும்; 2.5 யூனிட் அடங்கிய ஒரு லோடு மணல் 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: அரசு ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயித்துள்ள நிலையில், தனியார் சிலர் அதே அளவு மணலை, 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கின்றனர்.குவாரியில் இருந்து கட்டுமான பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்து செலவு காரணமாக, இந்த விலை என்கின்றனர்.
இதனால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும் என்பதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சராசரியாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள் மக்களுக்கு மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள், எந்தெந்த குவாரிகளில் இருந்து மணல் பெறலாம் என்பதையும், அரசு வரையறை செய்ய வேண்டும்.
அதேபோல, விற்பனை நிலையில், மணல் விலைக்கான உச்சவரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் மணல் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE