சென்னை:'ரேஷன் கடைகளில், சில மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி ஆய்வுகள் நடப்பதில்லை; ஆய்வின் தரமும் ஏற்புடையதாக இல்லை' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.அவை தரமானதாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுவதை உறுதி செய்ய, கடைகளில் ஆய்வு செய்ய, அனைத்துநிலை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, உணவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகளில், மாவட்ட கலெக்டர்கள் மாதம் 10 கடைகளிலும்; கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலா 20 கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.கூட்டுறவு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், கூடுதல் பதிவாளர் மாதம் 20; சென்னை இணை பதிவாளர் 50; மண்டல இணை பதிவாளர்கள் தலா 25 கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், பல அதிகாரிகள், முழுதுமாக ஆய்வு செய்வதில்லை. ஆய்வு செய்தது போல், பதிவு மட்டும் செய்கின்றனர்.
இந்நிலையில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் நசீமுதீன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:கலெக்டர்கள், மாவட்ட அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அவ்வப்போது ஆய்வு செய்வது தொடர்பாக, ஏற்கனவே வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், சில மாவட்டங்களில் நிர்ணயித்த இலக்கின்படி ஆய்வுகள் நடக்கவில்லை; ஆய்வின் தரமும் ஏற்புடையதாக இல்லை.
எனவே, கடைகளில் இருப்பு போன்றவற்றை சரிபார்ப்பதை தவிர, அதிகாரிகள், கார்டு தாரர்களின் வீடுகளுக்கு சென்று தொடர்பு கொள்ள வேண்டும்.அவர்களிடம் கடைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துகளை கேட்டு பெற வேண்டும்.ஆய்வு குறித்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE