பொன்னேரி:''ஆர்வமுடன் அதிக நேரம் செலவிட்டு படித்தால், 'நீட்' தேர்வு கடினமில்லை,'' என, மருத்துவப் படிப்பில் இடம் பெற்ற கிராமப்புற அரசு பள்ளி மாணவி அனுஷா பெருமிதத்துடன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பெரும்பேடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி - பார்வதி தம்பதியின் மகள் அனுஷா, 18; பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். பெரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த அனுஷா, 'நீட்' தேர்வு எழுதி, 273 மதிப்பெண்கள் பெற்றார். பயிற்சி மையம் சென்று படிக்காமல், வீட்டில் இருந்தபடி ஆசிரியர்களின் ஆலோசனையுடன் பயின்ற இவர், தற்போது அரசு உள் ஒதுக்கீடு வாயிலாக, மாநில அளவில் தரவரிசை பட்டியலில், 259 இடத்தை பிடித்து உள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு பெற்று உள்ளார். தமிழ் வழி கல்வியில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, தற்போது மருத்துவ படிப்பில் சேர உள்ள அனுஷாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி மற்றும் ஆசிரியர்கள் பெரும் உதவியாக இருந்து உள்ளனர்.
இது குறித்து, அனுஷா கூறியதாவது: என்னுடைய கல்வி ஆர்வத்தை கண்டு, ஆசிரியர்கள் என்னை நன்கு ஊக்குவித்தனர். பிளஸ் 2 முடித்தவுடன், நீட் தேர்வு எழுதுவதற்கு, பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினர். எந்த தனியார் பயிற்சிக்கும் செல்லவில்லை. வீட்டில் இருந்தபடி, 'ஆன்லைன்' வாயிலாக பல்வேறு தகவல்களை பெற்று, பயிற்சி பெற்றேன். எனக்கு தேவையான தமிழ் வழி புத்தகங்களை, ஆசிரியர்கள் தேடி பிடித்து வாங்கி கொடுத்தனர்.
நீட் தேர்வு என்பது மிகுந்த கடினம் என சொல்கின்றனர்; எனக்கு எந்த கடினமும் தெரியவில்லை. ஆர்வமுடன் புரிந்து படித்தால் கடினமாக தெரியாது. எப்படி படித்தால் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஆசிரியர்கள் வழிகாட்டினர்.நிறைய மாதிரி வினாத்தாள்களை சேகரித்து படித்தேன். என்னுடைய இந்த வெற்றிக்கு ஆசிரியர்களே முழுக் காரணம். பெற்றோர் ஒத்துழைப்பும் இருந்தது. தினமும் காலை, மதியம், மாலை, என, 12 மணி நேரம் படித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE